நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணி நியமனங்களுக்கு ரூ.650 கோடி வரை லஞ்சம் வசூலித்து முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழக டி.ஜி.பி-க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.

அதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப்பதியக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அமலாக்கத் துறை ஆதாரப்பூர்வமாக அளித்துள்ள கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிய முகாந்திரம் இருப்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம்’ என உத்தரவிட்டது.

ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை லஞ்ச ஒழிப்புத்துறை அமல்படுத்தவில்லை எனக்கூறி இன்பதுரை, உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘பணி நியமனங்களுக்கு லஞ்சம் வசூலித்தவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிய வேண்டுமென உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு என்.ஆர்.இளங்கோ, ‘வழக்குப்பதிய அரசின் அனுமதி தேவை’ என பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், ‘உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசின் அனுமதி பெற வேண்டுமா?’ என்றனர். அதற்கு அவர், ‘நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அரசின் அனுமதி பெறவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என தெரிவித்தார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறுக்கிட்டு, ‘இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வழக்குப்பதிவு செய்யவில்லை. அந்த மனு விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு வரும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 20-க்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை (டி.வி.ஏ.சி) வழக்குப் பதிவு (எஃப்.ஐ.ஆர்) செய்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது, அடுத்த கட்ட விசாரணை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று முந்தைய தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்த நிலையில், தற்போது எவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட முடியும்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த விஜய் நாராயண், முந்தைய அரசின் உறுதிமொழி தன்னை கட்டுப்படுத்தாது என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என் நேரு மீது தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், அடுத்ததாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவேண்டிய நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையும் வழக்குப் பதிவு செய்திருப்பதால், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal