தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கர்நாடக மாநிலம் குடகு மலையில் ஓய்வெடுக்கும் அதே சமயம், கட்சியின் எதிர்காலம் குறித்து அதிரடி மாற்றங்களையும், வியூகங்களையும் வகுத்து வருவதாகவும், குடகிலிருந்து திரும்பியவுடன் கட்சி ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறாராம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது, திமுகவினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவிலும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். அதிமுக மூத்த நிர்வாகிகளுக்குள்ளும் குழப்பநிலை இன்னும் நீடித்து வருகிறது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக, கர்நாடக மாநிலம் கூர்க் எனப்படும் குடகு மலைக்கு சென்றுள்ளார். அவருடன் மகன் உதயநிதி,மருமகன் சபரீசன் உள்பட குடும்பத்தினரும் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து தனிவிமானத்தில் மைசூரு சென்ற அவர்கள், அங்கிருந்து கார் மூலமாக குடகுமலைக்குச் சென்றுள்ளனர். ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் வருவதால், அதற்கு முன்பாக ஜூன் 2-ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்விக்குப் பிறகு குடகுமலைக்கு சென்றிருப்பது அறிவாலயத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், வழக்கமாக திமுகவின் அனைத்து முக்கிய முடிவுகளும் சென்னை அண்ணா அறிவாலயம் அல்லது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் எடுக்கப்படும். ஆனால் இம்முறை ஸ்டாலின் வேறு உத்தியைக் கையாண்டுள்ளார்.

சென்னையில் இருந்தால் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களின் அழுத்தம் மற்றும் சமரசப் பேச்சுகள் தடையாக அமையும் என அவர் கருதியதாகக் கூறப்படுகிறது. எனவே, எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாத குடகு மலையின் அமைதியான சூழலில் கட்சியின் பலவீனங்களை ஆழமாக ஆராய முடிவு செய்தார்.

நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, குடகு ரிசார்ட்டில் குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய ஆலோசகர்களுடன் நடைபெற்ற விவாதங்களில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதன்மையாக, தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படும் மாவட்ட அளவிலான உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, செயல்படாத மற்றும் தோல்வியடைந்த மூத்த மாவட்டச் செயலாளர்கள் பலரை அதிரடியாக நீக்கி, அவர்களுக்குப் பதிலாக இளம், துடிப்பான தலைவர்களை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் வேகமான வளர்ச்சியும், அவரைச் சுற்றிய வாரிசு அரசியல் பிம்பமும் நடுநிலை வாக்காளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதை கட்சித் தலைமை உணர்ந்துள்ளது. எனவே, உதயநிதியின் அதிகார வரம்பை சில அமைப்புகளில் மாற்றி, அடிமட்டத் தொண்டர்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் புதிய பொறுப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, அதிகாரப் பரவலாக்கல். ஒரே இடத்தில் அதிகாரம் குவிந்திருந்ததால் அடிமட்ட குரல் தலைமைக்கு எட்டாத நிலை உருவானதை ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். இனி மண்டல வாரியாக புதிய பொறுப்பாளர்களை நியமித்து அதிகாரங்களைப் பரவலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசின் மீதான அதிருப்தி, ஊழல் புகார்கள், அதிகாரத் தோரணை ஆகியவற்றை மக்கள் நிராகரித்துள்ளதை ஸ்டாலின் தெளிவாகப் புரிந்துகொண்டார்.

இதனால், ‘மக்களை நோக்கி திமுக’ என்ற புதிய மக்கள் தொடர்புப் பயணத்தை அடுத்த சில மாதங்களில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார். திமுகவின் 75 ஆண்டு வரலாற்றில் பல வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் கண்டுள்ளது இக்கட்சி. ஆனால் இம்முறை வரும் சவால் நவீனமானது. குடகு மலையின் குளிர்ந்த சூழலில் ஸ்டாலின் தீட்டியுள்ள இந்த ‘சூடான’ அரசியல் திட்டங்கள் திமுகவை மீண்டும் வலிமையான எதிர்க்கட்சியாக உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். குடகிலிருந்து சென்னை திரும்பும் ஸ்டாலினின் சீனியர்கள் பலரின் பதவியை பறிக்க இருக்கிறாராம். அதே சமயம் துடிப்பான இளைஞர்களுக்கு முக்கியத்துவத்தையும் கொடுக்க இருக்கிறாராம்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் சீனியர்களுக்கு செக்! ஜூனியர்களுக்கு ‘லக்’! அடிக்கப் போகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal