தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகள், த.வெ.க. அமைச்சரவையில் இணைந்ததற்கு (வி.சி.க., முஸ்லிம் லீக்) ஆ.ராசா கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருப்பதுதான் வி.சி.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வன்னியரசு பாபநாசம் தொகுதியிலும், ஷாஜஹான் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றார்கள். இவர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றது. இன்று விசிக, ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகியுள்ளனர். இதுவும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் பரபரப்புகள் ஓயவில்லை. ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க எதிர்க்கட்சியாகிவிட்டது. தி.மு.கவின் கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ் த.வெ.கவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சியும் த.வெ.க அமைச்சரவையில் இடம் பிடிக்கவுள்ளனர். இது தி.மு.கவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் மீது தி.மு.க மூத்த தலைவர் ராசா வைத்துள்ள விமர்சனம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸை தொடர்ந்து விசிக, ஐயூஎம்எல் மீதும் திமுக விமர்சனம் வைக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ. ராசா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘‘முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’
மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’
வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடித்தவனை புறந்தள்ளி —
புணர்ச்சிக்கு வேறிடம்
தேடுவதில் தவறில்லை!
பெரியாரின்
‘காலதேச வர்த்தமான’ த்திற்கு
காத்திருப்போம் ; என்றாலும்
களமாடுவோம் !
வெற்றி நமக்கே!!’’ என்று விமர்சித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தன் பக்கம் இழுத்து த.வெ.க. பலம் வாய்ந்த கட்சியாக இன்றைக்கு தமிழகத்தில் உருவெடுத்திருக்கிறது. இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவாக சென்றுவிட்டன. இதனால் திமுக அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் வரிசையில் திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுததிகள் வழங்கப்பட்டன. இதில் நாகப்பட்டினம் தொகுதியில் கட்சியின்தலைவர் எம்ச் ஜவாஹிருல்லா போட்டியிட்டு வெற்றி பெற்றார். மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது களமிறங்கி வாகை சூடினார். இவர்கள் 2 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில தான் தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் தேர்லில் மனிதநேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் எனறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கூட்டணியில் உள்ள கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது அவர்கள் பெயரளவில் வேண்டுமானாலும் பிற கட்சி எம்எல்ஏ என்று சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் உண்மையில் அவர்கள் திமுகவின் எம்எல்ஏக்களாக தான் கருதப்படுவார்கள்.

சட்டசபையில் திமுகவின் கொறடா உத்தரவை மீற முடியும். இதனால் சட்டசபையில் திமுக எடுக்கும் முடிவுக்கு நிச்சயம் ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோர் கட்டுப்பட வேண்டும். மீறினால் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் திமுகவின் கொறடா உத்தரவை பின்பற்ற வேண்டியது இல்லை.சட்டசபையில் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு வழங்கலாம். திமுக கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிட்டன. இதனால் தொங்கு சட்டசபை வந்த நிலையில் அவர்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முடிந்தது.

அதிலும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தவெகவுடன் சேர்ந்த காங்கிரஸ் 2 அமைச்சர்களையும், வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக போன விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றது. ஆனால் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட அவர்களால் தவெகவிற்கு ஆதரவு அளித்து அமைச்சர் பதவியை பெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது தான். இந்நிலையில் தான் இனி வரும் தேர்தல்களில் மனிதநேய மக்கள் கட்சி தனிச்சினத்தில் போட்டியிடும் என்று அந்த கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது திமுகவிற்கு அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தி.மு.க. தனித்துவிடப்பட்டிருப்பதுதான் தி.மு.க. தலைவர் உள்பட, அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தளவில் த.வெ.க. பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்திருப்பதுதான், அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு திராவிட கட்சிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal