தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கான ரேஸில் மொத்தம் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் அவர்களில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் நிர்வாக ரீதியில் பல்வேறு அதிரடிகளை பிறப்பித்து வருகிறார். முதல்வருக்கான தனிச் செயலாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.
அந்த வகையில் வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் உளவுத் துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் நேரத்தில் உளவுத் துறை ஐஜியாக அவினாஷ் குமாரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்த நிலையில் தற்போது புதிய மாற்றம் நடந்துள்ளது. அது போல் கடந்த அரசால் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்த வெங்கட்ரமணனை தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் மாற்றி, அவருக்கு பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட டிஜிபியையும் மாற்றி புதியவரை கொண்டு வர விஜய் அரசு ஆலோசனை செய்துள்ளதாம். அந்த வகையில் தமிழக டிஜிபி ரேஸில் 6 பேர் இடம்பெற்றிருக்கிறார்களாம். அவர்கள் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப்பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ரமணன், வினித் தேவ் வாங்கடே ஆகியோர் ஆவர். இந்த 6 பேரில் ராஜீவ் குமார், ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ரமணன் ஆகியோர் அதிக அளவில் முன்னணியில் இருக்கிறார்களாம். இவர்களில் ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்படுவர் என சொல்லப்படுகிறது. ஐபிஎஸ் அதிகாரிகளின் லட்சியப்பதவியான தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். இவர் 22 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்தார். 1994 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ 5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இவர் தலைமையிலான சிபிசிஐடிதான் கொள்ளையர்களை கைது செய்தது. இவர் தேனி மாவட்ட எஸ்பி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சென்னை பூக்கடை துணை ஆணையர், போக்குவரத்து பிரிவு துணை ஆணையர், சிபிஐ அதிகாரி, சிபிசிஐடி ஐஜி, மதுரை ஆணையர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், டிஜிபி அலுவலகத்தில் செயலாக்க பிரிவு ஏடிஜிபி, கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரி, சென்னை காவல் துறை ஆணையர், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி, எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை மகேஷ் குமார் வகித்துள்ளார்.
தமிழக காவல்துறையின் உயரிய பதவியான காவல்துறை தலைமை இயக்குநர் (Director General of Police), மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறார்.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த காவல் நிர்வாகமும் இவரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
