ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டி, பட்டியாக அடைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க ‘மனித பட்டிகளை உருவாக்கிவிட்டது’ என்ற குற்றச்சாட்டை அதிமுக வைத்தது. இந்த நிலையில்தான் கோவையில் மீண்டும் ‘மனித பட்டிகள்’ அமைக்கப்பட்டுவிட்டதா குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமாரிடம் புகார் அளித்தார். அதன்பிறகு அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கோவையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது போல தெரியவில்லை.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பட்டி அமைத்து மக்களை ஆடு மாடுகளைப் போன்று வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளார்கள். நாளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். கோவை தெற்கு தொகுதியில் மட்டுமல்லாமல் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பட்டி அமைக்கப்பட்டுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் சராசரியாக 1 வார்டுக்கு 3 இடங்களில் பட்டி அமைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத்தை நம்புபவர்கள். அதனால் நாங்கள் வெற்றி பெறுவோம். மக்களை சுதந்திரமாக விட வேண்டும். அமைத்த பட்டிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பட்டியிலும் 300 பேரை அடைத்து வைத்து உணவு, சம்பளம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

தங்களுக்கு ஆதரவாக எந்த வாக்காளர்களும் வந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி செய்கிறார்கள். காவல்துறையினர் திமுகவுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள். திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். கரூரில் செய்ததை இங்கு செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அவர் செந்தில் பாலாஜி இல்லை.

பொய் வாக்குறுதிகளையும், டோக்கன்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். கோவை தெற்கில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். செந்தில் பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாலும் மக்கள் அவரை வெற்றி பெற விட மாட்டார்கள். மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது,

உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையை மக்கள் வழங்குவார்கள். பணநாயகம் என்றும் வென்றதாக சரித்திரம் இல்லை. பணநாயகம் வெல்லும் என்றால் அம்பானி, அதானி, டாட்டா பிர்லா போன்றவர்கள் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ளலாமே. எதற்காக ஆயிரம் கோடி அளவிற்கு தேர்தல் ஆணையம் செலவழிக்க வேண்டும். நான் 17 வயதில் கோவைக்கு வந்தேன். அப்போது செந்தில் பாலாஜி கரூரில் பிறக்கவில்லை. யாருக்கும் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். அதனால் தான் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். அதை போல் செந்தில் பாலாஜி அவரது தொகுதியில் போட்டியிடலாமே. கரூரில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றவர் தானே. செந்தில்பாலாஜியின் டோக்கன் அங்கு விலை போகாது.

உங்கள் பப்பு அங்கு விலை போகாது. கோவை மக்களை ஏமாற்ற வேண்டும் என்று இங்கு வந்துள்ளார். ஆனால் கோவை மக்கள் அதிக அறிவு படைத்தவர்கள் அமைதியானவர்கள். இங்கு அமைதி வளம் வளர்ச்சியை தான் எதிர்பார்ப்பார்கள். கோவை மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் ஆனால் மே 4 ஆம் தேர்தல் முடிவில் அவர்கள் ஏமாறுவார்கள்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal