சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரின் தாயார் கமலா மரணமடைந்தார்.

யூடியூப் பிரபலமான சவுக்கு சங்கர் தொடர்ந்து தமிழக அரசை குற்றம்சாட்டி வந்தார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டதோடு, சமூக வலைதளங்களிலும் கருத்துகள் தெரிவித்து வந்தார்.

இதற்கிடையே தான் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் 2 மோசடி வழக்குகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உடல்நல பிரச்சனையை காரணம் காட்டி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிபந்தனை ஜாமீன் 12 வாரங்கள் கொடுக்கப்பட்டது.

சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதனால் மார்ச் 25ம் தேதிக்கு பிறகு சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார்.

சவுக்கு சங்கரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தான் ஆந்திராவில் லாட்ஜில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை கடந்த 8 ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல் புழல் சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக குண்டர் சட்டம் பாய்ந்தால் ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது. இதனால் சவுக்கு சங்கருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை அணுகி குண்டர் சட்டத்தை உடைக்க முடியும். அது, நடந்தால் சவுக்கு சங்கர் ஓராண்டுக்கு முன்பே வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான். இந்த நிலையில்தான் சவுக்கு சங்கரின் தாயார் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal