சேலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை திடீரென மயங்கி விழுந்ததால் அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாமகவில் தந்தை, மகனுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ராமதாஸ் போட்டி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், நேற்று சேலம் மாவட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் அருளை ஆதரித்து, பள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையை முடித்துவிட்டு மேடையிலிருந்து அவர் கீழே இறங்கிய சமயத்தில், எதிர்பாராத விதமாக அவருக்குத் திடீர் தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் பதற்றம் உருவானது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், “அதிக வெயில் மற்றும் அலைச்சல் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததே இந்தத் திடீர் மயக்கத்திற்குக் காரணம். தற்போது உரிய சிகிச்சைக்குப் பிறகு அவர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார், அச்சப்படும்படி ஏதுமில்லை“ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தந்தை ராமதாஸ் மயங்கியது பற்றி அன்புமணி ராமதாஸ் பா.ம.க. நிர்வாகியிடம் மேடையிலேயே பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

வீடியோவின் படி, விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தின் போது, “ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுனா, இவர்களை நான் சும்மா விட மாட்டேன்,“ என்று கூறுகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal