எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேண்டிய தவெக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டதாக அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, இதற்கான விளைவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக போட்டியிடுகிறது. தவெக சார்பாக எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நித்யாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இவர்கள் இருவருமே வேட்புமனுவை முழுமையாக நிரப்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அதிலும் அருண்குமார் வேட்புமனு பரிசீலனையின் போது நேரில் கூட வரவில்லை. இதனால் அதிமுக மற்றும் தவெக இடையே ஏதோ மறைமுக டீலிங் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும் அதிமுக நேரடியாக போட்டியிடவில்லை. தலித் சமூக மக்கள் அதிகமிருக்கும் தொகுதியில் பாமகவை போட்டியிட வைத்திருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் பின்வாங்கியது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசுகையில், வில்லிவாக்கம் தொகுதி மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். திமுக வேட்பாளர் கார்த்திம் மோகன் வாக்குக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கிறார். நாங்கள் பணம் கொடுக்க போவதில்லை. காங்கிரஸ் மற்றும் விசிக கட்சி தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டார்கள்.
அதனால் திமுக கூட்டணியில் வேலை பார்க்கவே ஆளில்லை. அதேபோல் ஜனநாயகன் அரசியல் படம் கிடையாது. அரசியலே இல்லாத ஒரு படத்தை வேண்டுமென்றே தடுத்திருக்கிறார்கள். பாஜக, திமுக சேர்ந்து கொண்டு விஜய்யை தடுக்க முயற்சிக்கிறார்கள். திமுக பெயரளவில் தான் பாஜகவை எதிர்க்கிறது. நேரு, வேலு, செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள போது, ஏன் இதுவரை ரெய்டு நடத்தப்படவில்லை.
எடப்பாடி தொகுதிக்கான தவெக வேட்பாளர் ஒரு கருப்பு ஆடு. எடப்பாடி பழனிசாமியிடம் பணம் பெற்றுக் கொண்டு அந்த கருப்பு ஆடு, உடனடியாக அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விட்டது. இது ஒரு தவறான அரசியல்.. வேட்பாளரை காசு கொடுத்து தூக்குவது ஜனநாயகமற்ற அரசியல். எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்கு அந்த தொகுதியில் தவெக பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
