தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பளார்கள் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில்தான் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளரை, மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று தி.மு.க. அமைச்சர் நலம் விசாரித்த சம்பவம்தான் நெகிழச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளார் அமைச்சர் கோவி.செழியன்.

திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அதிமுக வேட்பாளர் இளமதி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஆடுதுறை பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை கேள்விபட்ட அமைச்சர் கோவி செழியன் தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதிமுக வேட்பாளர் இளமதியை நலம் விசாரித்தார். அப்போது அதிமுக வேட்பாளர் அமைச்சருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார். அமைச்சர் கோவி .செழியனின் செயல் திமுக, அதிமுகவினரிடையே பாரட்டை பெற்றுள்ளது.

அரசியல் என்பது கொள்கை ரீதியிலான மோதலே தவிர, தனிமனித பகை அல்ல என்பதை அமைச்சர் கோவி. செழியனின் இந்தச் செயல் நிரூபித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal