சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் போட்டியிடும் நிலையில் வேட்புமனு பரிசீலனை நாளான இன்று திடீரென்று மாயமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியாகும். கடந்த 2011, 2016, 2021 என 3 சட்டசபை தொகுதிகளில் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை 4வது முறையாக எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி தொகுதியில் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடந்தது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
எடப்பாடியில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. இதையடுத்து தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வட்டாச்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். இந்த தொகுதியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
வட்டாச்சியர் அலுவலகத்துக்குள் சென்ற தவெக வேட்பாளர் அருண் குமார் திடீரென்று மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அவரை பல இடங்களிலும் தவெகவினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தவெகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? என்று அங்கிருந்தவர்கள் பேச தொடங்கினர். இதனால் தவெக வேட்பாளர் எங்கே? என்று கேட்டு கட்சியினர் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்து வேட்பாளர் அருண் குமாரை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக காசி என்பவர் களமிறங்கி உள்ளார். இவரது வேட்புமனு இன்று பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது அவரது வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்புமனுவில் காசியின் கையெழுத்துகளில் வித்தியாசம் இருப்பதாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சேலம் திமுக எம்பி செல்வகணபதி வந்து திமுக வேட்பாளர் திமுக வேட்பாளர் காசியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இதனால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இந்த தொகுதியில் மொத்தம் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சம்பவங்களால் எடப்பாடி வட்டாச்சியர் அலுவலகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
