தாம்பரம் தொகுதி வேட்பாளராக கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த விவகாரம்தான் அ.தி.மு.க வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம்பரம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜாவுக்கு இம்முறை போட்டியிட சீட் வழங்கவில்லை. புதுமுகமான மருத்துவர் கிருத்திகா தேவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.ஆர்.ராஜா ஆதரவா ளர்கள் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், தாம்பரம் வந்த ஆ.ராசா, எம்.பி., எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ‘‘தலைமை அறிவித்துள்ளதால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என ஆ.ராசா அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் எஸ்.ஆர்.ராஜா இல்லத்தில், புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் கிருத்திகா தேவி சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்கிடையே எஸ்.ஆர்.ராஜாவிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி, ‘நான் நிறுத்திய வேட்பாளரை நீங்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த விவகாரம் தாம்பரம் திமுகவினரிடம் நீரு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இதனை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்தி வருகின்றனர்.

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் மருத்துவர் கிருத்திகா தேவி போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் களம் காண்கிறார். த.வெ.க. சார்பில் சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தாம்பரம் தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அப்பகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருக்கும் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
தி.மு.க. வேட்பாளர் மீது அதிருப்தி நிலவும் நிலையில், தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமாக சிட்லபாக்கம் ராஜேந்திரன் தாம்பரம் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. தி.மு.க.வில் நடக்கும் உள்குத்துகள் மருத்துவரையே ‘நோயாளி’யாக்கும் என்பதால், தாம்பரம் தொகுதியில் இலை துளிர்கிறது.
