கரூரில் இருந்து கோவை தெற்கில் செந்தில் பாலாஜி களமிறங்கும் நிலையில், கோவை வடக்கில் செந்தில் பாலாஜி களமிறங்கவேண்டும் என அ.தி.மு.க. வேட்பாளர்கள் வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அல்லது கட்சியில் தேசியளவிலான பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் அண்ணாமலை அப்செட் ஆகியுள்ளார். சட்டசபை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அண்ணாமலைக்கு கோவையில் கவுண்டம்பாளையம் அல்லது சிங்காநல்லூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவுக்கு கோவையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் அண்ணாமலை விரும்பிய தொகுதியை பாஜகவினர் கேட்டு பெறவில்லை. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவை வடக்கு தொகுதியில், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
அதனால் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியை கேட்டார். அங்கு ஏற்கனவே பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனால் அண்ணாமலைக்கு மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை கேட்டுள்ளது. அதற்கு அண்ணாமலை மறுத்துவிட்டார். மேலும் கோவை வடக்கு தொகுதி இல்லையென்றால்.. வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என்கிற முடிவையும் அவர் எடுத்துள்ளார்.
வானதி சீனிவாசனும் கோவை வடக்கு தொகுதியை கேட்டு வருகிறார். இதன் காரணமாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று திடீரென அண்ணாமலையை சந்தித்து, தங்கள் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் லட்சுமணசிங், மேட்டுப்பாளையம் வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ், கிணத்துக்கடவு எஸ்.தாமோதரன், சூலூர் வி.பி. கந்தசாமி, கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுணன், சிங்காநல்லூர் கே.ஆர். ஜெயராம் உள்ளிட்டோர் கோவை காளபட்டியில் உள்ள அண்ணாமலை இல்லத்தில் நேற்று சந்தித்தனர். வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் அண்ணாமலை சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கோவை வடக்கு தொகுதியை வைத்து நடக்கும் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வேலுமணியின் உத்தரவில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கோவையில் போட்டியிடுகிறார். இதனால் அண்ணாமலையை அவருக்கு எதிராக கோவையில் பயன்படுத்த நினைக்கிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றார். தற்போது அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டால் அதன் தாக்கம் கோவையின் 10 தொகுதிகளிலும் எதிரொலிக்கும். டெல்லி பாஜகவுக்கு அண்ணாமலை கோவைக்கு வேண்டும் என்கிற அழுத்தமாக மெசேஜை வேலுமணி அனுப்பியுள்ளார்’’ என்றனர்.
