திருச்சிக்கு வந்த விஜய் கே.என்.நேருவை நேரடியாக சீண்டிய விவகாரம்தான் தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏராளமான தொண்டர்களை கடந்து திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு அலுவலகத்திற்கு விஜய் சென்றடைந்தபோது, சுயேட்சை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தார்.
அதனால் வேனில் அமர்ந்தபடியே காத்திருந்தார். சுயேட்சையின் வேட்புமனு தாக்கல் முடிந்தபிறகு, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி உதவி ஆணையருமான முத்து முருகேச பாண்டியிடம் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் தவெக முக்கிய நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விஜய்க்கு மாற்று வேட்பாளராக கு.பா. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வேட்பு மனு தாக்கல் செய்தார். விஜய் வருகையையொட்டி மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பேசிய விஜய், ‘‘ தமிழ்நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கடுமையாகச் சாடினார். “சரி ஆயிடுச்சா? Solve ஆயிடுச்சா? Gas எல்லாம் book பண்ணிக்கினா book ஆவுதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், இந்தப் பிரச்சனையால் எத்தனை டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன, எத்தனை ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன, எவ்வளவு மக்கள் கஷ்டப்படுகிறார்கள், எவ்வளவு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விரிவாகப் பேசினார்.
இந்தப் பிரச்சனையை முன்கூட்டியே எதிர்பார்த்து நிர்வாகம் செய்யத் தவறியதாக திமுக அரசை விமர்சித்த விஜய், “இவங்க ரெண்டு பேரும் தான் இதுக்கு காரணம். ஆனா நம்ம ஸ்டாலின் சாரை கேட்டீங்கன்னா நமக்கு அதுக்கும் சம்பந்தமே இல்லையே அப்படின்பாரு” என்றார். மேலும், “அவரு வீட்டுல ஏதாவது ஒரு பிரச்சனைன்னா டெல்லிக்கு பறந்து போயிட்டு வருவாரு. இந்த gas cylinder பிரச்சனைக்கு கொஞ்சம் டெல்லிக்கு பறந்து போயிட்டு வரலாம்ல” என்று கிண்டலும் செய்தார்.
திமுக அரசு அளித்த பல வாக்குறுதிகளை நினைவூட்டி அவை நிறைவேற்றப்படவில்லை என்று தாக்கிய விஜய், gas cylinder-க்கு ரூ.100 மானியம், கரும்புக்கு ஆதார விலை ரூ.4000, ரேஷனில் சர்க்கரை extra, உளுந்தம் பருப்பு, NEET ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். “இதெல்லாம் அவரால செய்ய முடியாததை பொய் வாக்குறுதியாகக் கொடுத்து மக்களை ஏமாற்றுவது தான் இவருடைய வேலை” என்று குற்றம் சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் முக்கிய திட்டங்களை அறிவித்த விஜய், தாய்மார்களுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி (அன்னபூர்ணி சூப்பர் சிக்ஸ் திட்டம்), திருமணமாகும் தங்கைகளுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை, 60 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பஸ் இலவசப் பயணம் ஆகிய திட்டங்களை உறுதியாக நிறைவேற்றுவோம் என்றார்.
“கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பஸ் போக்குவரத்து – இந்த அடிப்படை விஷயங்களில்தான் எங்களுடைய முதல் கவனம் இருக்கும்” என்று வலியுறுத்திய அவர், அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் ஏற்பட்ட சோக சம்பவங்களை நினைவூட்டி, அடிப்படை வசதிகள் இல்லாததுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்றார்.
நகராட்சித் துறையில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டிய விஜய், மற்ற துறைகளிலும் பெரும் ஊழல் இருப்பதாகவும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 2,000க்கு மேல் அறிவித்தும் வெறும் 5 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டதாகவும், லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் தாக்கினார்.
பிரச்சாரத்தின் இறுதியில் விஜய், “இந்தத் தேர்தல் ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல். எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று மக்களிடம் உணர்ச்சிபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார்.“ஏப்ரல் 23ஆம் தேதி காலையில் voter ID கையில் எடுத்துக்கொண்டு முதல் ஆளாக வாக்குச்சாவடிக்குச் சென்று விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள்” என்று வலியுறுத்தினார்.
“இந்தத் தேர்தலில் இரு முனைப் போட்டிதான். ஒன்று மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார், இன்னொன்று மக்களை நேசிக்கும் விஜய். நீங்கள் யாரைத் தேர்வு செய்வீர்கள்?” என்று கேட்ட விஜய், “எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். விசில் புரட்சி தேர்தல் ஆகட்டும்” என்று பேச்சை நிறைவு செய்தார்.
