கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார் அப்போதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பது பழமொழி. அப்படிப்பட்ட விவசாயிகளுக்கான கூட்டுறவுக்கடன் தள்ளுபடி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக வெளியாகவில்லை. கலைஞர்தான் முதன் முதலாக விவசாயக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டு ஆட்சியைப் பிடித்தார். ஆனால், 2026 தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாயக்கடன் தள்ளுபடி இடம்பெறவில்லை.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ‘‘விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி சம்பந்தமாக இந்த தேர்தல் அறிக்கையிலே இல்லை என்கிற ஒரு குறையை விவசாயிகள் பலரும் என்னிடத்திலே தெரிவித்தார்கள். நேற்று மாலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்திலே, ‘இந்த விவசாயிகள் பெற்றிருக்கக்கூடிய கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற அறிவிப்புஞ் தள்ளுபடி செய்வோம் என்கிற வாக்குறுதியை நீங்கள் வழங்க வேண்டும்’ என்று நேற்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரடியாக சந்தித்தபோது நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் இப்போது புதிதாக வந்திருக்கக்கூடிய கூட்டுறவு சட்டப்படி, மத்திய அரசாங்கம் அனுமதி கொடுத்தால்தான் கடனை தள்ளுபடி செய்ய முடியும் என்கிற ஒரு புதிய நிலைமை என்பது ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை நாம் ஆட்சிக்கு வந்து பிஜேபி அதனால் அனுமதி தர முடியாத, தராத ஒரு நிலைமை ஏற்பட்டால் விவசாயிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதனால்தான் நான் அந்த வாக்குறுதியை வழங்கவில்லை என்று முதலமைச்சர் அவர்கள் விளக்கத்தைத் தெரிவித்தார்கள்’’ என்றார்கள்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே விவசாயக்கடனை தள்ளுபடி செய்தவர்தான், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மு.க.ஸ்டாலின் விவசாயக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிடாதது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே சமயம், ‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என அறிவித்திருக்கிறார். எனவே, விவசாயிகள் இந்தமுறை யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
குறிப்பாக, தி.மு.க. ஆட்சியமைந்தால் விவசாயக்கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றுகூட சொல்லவில்லை. அதே போல், மகளிர் உரிமைத் தொகை அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிலாம். ஆனால் அந்த அறிவிப்பும் இல்லை என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
எனவே, விவசாயிகளின் வாக்குகளை அப்படியே அ.தி.மு.க. அள்ளுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்கிறார்கள்.
