தி.மு.க.வில் பரம்பரை பரம்பரையாகவும், கட்சியின் வளர்ச்சிகாகவும் பாடுபட்டவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக சீட் கொடுத்திருப்பதுதான் தி.மு.க.வில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லை. அதே போல் அமைச்சர்கள் ராணிப்பேட்டை காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, சிட்டிங் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா உள்பட பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த முறை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர்தான் பூங்கோதை ஆலடி அருணா.தவிர, தி.மு.க.வின் ஆணிவேராக இருந்த பேராசிரியன் அன்பழகனின் பேரனுக்கும் இந்த முறை சீட் மறுக்கப்பட்டிருப்பதுதான் உடன் பிறப்புக்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

அ.தி.மு.க.வில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணைந்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இணைந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களுக்கு உடனடியாக சீட் கொடுத்திருப்பதுதான், அந்தந்த தொகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது தவிர, அ.தி.மு.க.வில் இருந்து வந்த தர்மபுரி பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம், விழுப்புரம் லட்சுமணன் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

குறிப்பாக பேராசிரியர் அன்பழகனின் பேரனும், வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வெற்றியழகனுக்கு இம்முறை தொகுதி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரை எதிர்த்துப் போட்டியிட்ட வெற்றியழகன், 37 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வில் இந்த முறை வாரிசுகளுக்கு அதிகளவில் சீட் கொடுத்த நிலையிலும், பேராசிரியரின் பேரனுக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதுதான் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான பதிலை தேர்தல் முடிவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal