காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஓரிரு நாட்களில் பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் ‘திடீர்’ வேட்பாளராக இருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க.வின் தீவிர ஆதரவைப் பெற்ற தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதுதான் காங்கிரஸ் கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. காரணம், காலம் காலமாக கட்சிக்கு உழைத்துவரும் கதர்சட்டைக்காரர்களுக்கே வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நிலையில், தமிழ்குமரனுக்கு வாய்ப்பு கிட்டியது எப்படி என்று பார்ப்போம்.
பாமக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் கடந்த 28ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
பாமக இளைஞர் சங்கத் தலைவராக இருந்த அன்புமணி, கடந்த 2023-ல் பாமக தலைவரானார். அப்போது கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கவுரவத் தலைவரானார். இதனால் ஜி.கே.மணி அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து அவரது மகன் தமிழ்க்குமரனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு கொடுத்து மணியை சமாதானம் செய்தார் ராமதாஸ். பின்னாளில் அந்த பதவியை தமிழ்குமரன் ராஜினமா செய்தார். அதற்கு அன்புமணி தான் காரணம் எனச் சொல்லப்பட்டது.
இதையடுத்து, ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கும் அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இப்படியான சூழலில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதால் தனது தந்தை சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கும் அங்கு தமிழ்க்குமரன் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
தி.மு.க.வின் ஆதரவில்தான் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் வெற்றி பெற்றார். தற்போது தி.மு.க. ஆதரவில் பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக திடீரென்று தமிழ்குமரன் களமிறங்குவதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
