அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.க. நிர்வாகி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதை எம்.எல்.ஏ. கண்ணன் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் தனசேகரும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு காத்திருந்தார். இந்த நிலையில்தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தனசேகரன் கண்ணீர் விட்டு அழுத சம்பவம்தான் அப்பகுதி தி.மு.க.வினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இது பற்றி தனசகர் கூறும்போது, ‘‘7 முறை ஒன்றியச் செயலாளராக இருந்து, 40 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். ஆனால், பணத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு ஆ.ராசாதான் காரணம் என்றார். எனவே, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.விற்கு தேர்தல் வேலைகளை நான் செய்யமாட்டேன்’’ என்றார் ஆதங்கத்துடன்!
மேலும், ‘‘கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் மாவட்டச் செயலாளர்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். கட்சிக்காக உழைத்தவர்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள்’’ என்று தனது வேதனையை பகிர்ந்தார்.
தி.மு.க. நிர்வாகி கண்ணீர் விட்டு அழுத சம்பவம்தான், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது தி.மு.க. நிர்வாகிகள் ‘உங்களுடன் நாங்கள் இருப்போம். நீங்கள் ஏன் அழுகிறீர்கள்’ என ஆதரவு கொடுத்தனர்.
தி.மு.க.வில் இதே போல் பல தொகுதிகளில் அதிருப்திகள் நிலவுகிறது. இதனால் ஏற்படும் உள்குத்துக்களால் பல இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் கரைசேர்வதே கடினம் என்கிறார்கள்.
