திமுக கூட்டணியில் காங்கிரசை தவிர்த்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து சிபிஎம் மற்றும் தேமுகதிவுக்கான தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டு சுமூகமாக முடிவு செய்யப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டன. மதிமுகவின் வேட்பாளர்களும் முடிவு செய்யப்பட்டுள்ளனர்.காங்கிரஸுக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த தொகுதி விவரங்கள் நமது மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 5 இடங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

விசிகவுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சிக்கான தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 5 இடங்களைப் பெற்றுள்ள சிபிஎம் மற்றும் 10 இடங்களைப் பெற்றுள்ள தேமுதிகவுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தையில் அக்கட்சிக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. அதேபோல தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி. தலைமையிலான குழுவும் சென்னை அண்ணா அறிவால்யத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், ‘‘தேமுதிகவுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுமூகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அதன் பிறகு அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த டி.ஆர்.பாலு, ‘‘காங்கிரசைத் தவிர்த்து மற்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மாலை கூட்டணி கட்சிகள் மற்றும் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளை ஸ்டாலின் அறிவிப்பார்’’ என்றார்.
