சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், செல்போனில் பேசியும் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக பேராசியர் ஒருவர், தொடர்ச்சியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகவும் மாணவி குறிப்பிட்டுள்ளார். தனக்கு மட்டுமல்லாமல், தனது தோழிகள் சிலருக்கும் அவர் பாலியல் ரீதியான குறுஞ்செய்தியை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் தனது நண்பர்களுடன் பேசுவதை அவர் தவறாக பேசுவதாகவும், இரவு நேரத்தில் தொடர்ச்சியாக செல்போனில் அழைத்து தொல்லை கொடுத்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக கமிட்டியிடமும் தான் புகார் அளித்திருப்பதாகவும், விரைந்து விசாரணை நடத்தி அந்த பேராசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் மாணவி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த புகார் மனு மீது உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிரடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக, மாணவியின் செல்போனுக்கு பேராசியர் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் அனைத்தையும் போலீசாசர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

புகாரில் மாணவி குறிப்பிட்டுள்ளது போல், பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை பேராசிரியர் அனுப்பியது நிரூபணமாகும் பட்சத்தில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal