திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. 2016 மற்றும் 2021 என தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது மீண்டும் மூன்றாவது முறை வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில்தான், தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க.வில் வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் விரும்புகின்றனர். ஆனால், தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுபற்றி துறையூர் தொகுதி சீனியர் ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் தனி தொகுதியாக இருக்கிறது. எனவே, இங்கு தேவந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை களமிறக்கினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், இங்கு மீண்டும் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
காரணம், துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் முத்தரையர் வாக்குகள் அதிகளவில் இருக்கிறது. தவிர, சுமார் 55 ஆயிரம் வாக்குகள் தேவேந்திர குலவேளாளர் சமுதாய வாக்குகள் இருப்பதால், அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக நேர்காணல் நடத்தினார் அப்போது, அருந்ததியர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் நேர்காணலுக்கு சென்றனர். உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
எனவே, துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் வெற்றி தோல்வியை தீர்மாணிக்கும் சக்தியாக இருக்கும் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த, தகுதியான ஒரு நபரை நிறுத்தினால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும். இல்லாவிட்டால் தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெற்றுவிடும் என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது.
ஆனால், அதிகார மையங்களின் மூலமாக சிலர் வேறுவகைகளில் காய்நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வருகிறது. அப்படி வந்தாலும் அவர்கள் வெற்றி பெறுவார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வியே?’’ என்றனர்.
அதிகார மையங்களாக இருப்பவர்கள் ‘வெற்றி’ வேட்பாளரை களத்தில் இறக்குவார்களா? என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
