கொங்குமண்டலமான ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழல்கள் உருவாகியிருப்பதுதான் தி.மு.க.வினரை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த 2016ல் அ.தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க உதவியது கொங்குமண்டலம்தான். அதே போல் 2026ல் தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க கொங்குமண்டலத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்து கடுமையாக களப்பணியாற்றி வருகிறார்.
கொங்குமண்டலத்தில் 100 சதவீத வெற்றி என்ற இலக்குடன் செந்தில்பாலாஜி களப்பணியாற்றி வரும் நிலையில்தான், ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. காரணம், தி.மு.க.வின் வேட்பாளர் தேர்வு சரியில்லை என்ற தகவல்கள்தான் உடன்பிறப்புக்களை சோர்வடைய வைத்திருக்கிறது.

இது பற்றி பவானியில் உள்ள சீனியர் உடன்பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பவானி தொகுதியைப் பொறுத்தளவில் 9 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. பவானி தொகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாய வாக்குகள்தான் அதிகம். அடுத்தது வன்னியர் வாக்குகளும் இருக்கிறது. பவானி தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாகவே இதுநாள் வரை இருந்து வருகிறது.
இந்த முறையாவது தி.மு.க. வெற்றி பெறுமா? என்று எதிர்நோக்கி காத்திருந்தோம். ஆனால், எங்களுக்கு கிடைக்கும் தகவல்களைப் பார்த்தால், தி.மு.க. வெற்றிபெற வாய்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், அ.தி.மு.க.வில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.சி.கருப்பண்ணன் போட்டியிட இருக்கிறார். முன்னாள் அமைச்சரான கே.சி.கருப்பண்ணன் மூன்று முறை இந்தத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். அதே போல், 2026ல் புதிய வரவான ‘தமிழக வெற்றிக் கழகம்’ சார்பிலும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் களத்தில் இறங்க இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில் வன்னியர் ஒருவரை வேட்பாளராக களத்தில் இருக்க தி.மு.க. முடிவு செய்திருக்கிறது. அ.தி.மு.க.வில் பலமான கொங்குவேளாளர் கவுண்டர் சமுதயாத்தைச் சேர்ந்தவர் களத்தில் இறங்கும் நிலையில், அவருக்கு இணையாக தி.மு.க.விலும் அதே சமுதாயத்தைச் சேர்ந்த தகுதியுள்ள ஒருவரை களத்தில் இறக்கினால்தான் வெற்றி பெற முடியும்.
தவிர, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருப்பதால் அக்கட்சிக்கு வன்னியர் வாக்குகள் சென்றுவிடும். எனவே, கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக களத்தில் இறக்கினால்தான், கொங்குவேளாளர் கவுண்டர் சமுதாய மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்து அக்கட்சியை வெற்றி பெற வைப்பார்கள். தற்போதைய நிலையில், தி.மு.க.விற்கு வன்னியர் வாக்குகளும் கிடைக்காமல், கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாய வாக்குகளும் கிடைக்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
பவானி தொகுதியின் நிலைமை இப்படி இருக்க, வன்னியர் சமுதாய வேட்பாளர் ஏற்கனவே கே.சி.கருப்பண்ணனிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறார். எனவே, தி.மு.க. தலைமை உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் ‘வெற்றி பெறும்’ வேட்பாளரை தேர்வு செய்யவேண்டும்’’ என்றனர்.
கொங்குமண்டலத்தில் கண்ணுக்குத் தெரிந்தே ஒரு தொகுதி அ.தி.மு.க. வசமாவதைத்தான் உண்மையான உடன்பிறப்புக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..!
