ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வினரிடையே நடக்கும் மல்லுக்கட்டில் அ.தி.மு.க. ‘குஷி’யாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 1996ல் இருந்து தி-மு.க. முன்று முறையும், அ.தி.மு.க. மூன்று முறையும் சமமாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும், 2011 மற்றும் 2016ல் கே.வி.ராமலிங்கம் தொடர்ச்சியாக இரண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவர் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தவர். 2021ல் வெற்றி பெற்ற சு.முத்துசாமி தற்போது அமைச்சராக இருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வில் நடக்கும் உள்குத்தால், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா என்ற மனநிலைக்கு மாறியிருக்கிறாராம் அமைச்சர் சு.முத்துசாமி. இது பற்றி ஈரோடு மேற்கு மாவட்டத்தில் உள்ள சீனியர் உடன் பிறப்புக்களிடம் பேசினோம்.

‘‘சார், ஈரோடு மாநகராட்சி மேயராக இருந்தவர் நாகரத்தினம். இவரது கணவர் சுப்பிரமணியம் ஈரோடு மாநகர தி.மு.க. செயலாளராக இருக்கிறார். இவர் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். இவருக்கும் தற்போது அமைச்சராகவும், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் சு.முத்துசாமிக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் சுப்பிரமணியம் போட்டியிட வேண்டும் என்று ஏராளமானோர் அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்திருக்கிறார்களாம். இந்த நிலையில்தான், ஒருவேளை சுப்பிரமணியத்திற்கு சீட் கொடுத்தால், சு.முத்துசாமி தரப்பு உள்ளடி வேலைகள் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் மீண்டும் சு.முத்துசாமி போட்டியிட்டால் சுப்பிரமணியம் தரப்பு உள்ளடி வேலைகள் பார்க்க வாய்ப்பிருக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக களமிறங்கும் கே.வி.ராமலிங்கம் மூன்றாவது முறையாக ஈரோடு மேற்கில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

எனவே, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில், சு.முத்துசாமி ஈரோடு கிழக்கிற்கு மாறும் பட்சத்தில், புது முகங்களுக்கோ அல்லது படித்த இளைஞர்களுக்கோ வாய்ப்பு கொடுத்தால் தி.மு.க. இரண்டாவது முறையாக வெற்றி பெறும். இல்லாவிட்டால், அ.தி.மு.க. சார்பில் யார் நின்றாலும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது’’ என தி-.மு.க.வின் உள்ளடிகளை நம்மிடம் விளக்கினார்கள்.

தி.மு.க. நேர்காணலின் போது, ‘யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றி பெற வைக்கவேண்டும்’ என முதல்வர் கூறி வருகிறார். ஆனால், உள்ளடி வேலைகள் யாருக்கு நடக்காதோ அவர்களை களத்தில் இறங்கினால்தான் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக களநிலவரம் சொல்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal