அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாக மாறியது. அதற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் 50 ஆண்டுகளுக்கு பிறகு பவானி தொகுதியும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு கோபி தொகுதியும் தி.மு.க. வசமாகுமா? என்ற எதிர்பார்ப்பு உடன்பிறப்புக்களிடையே அதிகரித்து இருக்கிறது.

கொங்குமண்டலத்தில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்வேன் என்று சவால் விட்டு செந்தில்பாலாஜி களத்தில் இறங்கி வேலை பார்த்து வரும் நிலையில், கோபி செட்டிப்பாளையம் மற்றும் பவானி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு தி.மு.க.வில் உள்ள சில முக்கியப் புள்ளிகளே ‘புள்ளி’ விபரங்களை தலைமைக்கு தவறாக அனுப்பி, தவறான வேட்பாளர்களை களத்தில் இறக்கி அ.தி.மு.க.வின் வேட்பாளர்களுக்கு மறைமுகமாக உதவி புரிவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி கொங்கு மண்டல அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பவானி தொகுதியைப் பொறுத்தளவில் 50 வருடமாக தி.மு.க. எம்.எல்.ஏ. அங்கு இல்லை. அ.தி.மு.க.தான் அதிகளவில் வெற்றி பெற்று இருக்கிறது. காரணம், தி.மு.க.வில் அதிக உள்ளடி வேலைகள் நடப்பதுதான்.

பவானி தொகுதியில் கடந்த மூன்று முறையாக வெற்றி பெற்று வருபவர் கே.சி.கருப்பண்ணன். இவர் முன்னாள் அமைச்சரும் கூட! தவிர, எடப்பாடி பழனிசாமிக்கு சம்மந்தி உறவுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் இவர்தான் களத்தில் இறங்குகிறார். கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.சி.கருப்பண்ணன், எப்படியாவது பவானி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று விட வேண்டும் என காய்நகர்த்துகிறார்.
அதாவது, தன்னை எதிர்த்து தனது சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் தி.மு.க. சார்பாக போட்டியிடக்கூடாது என்பதற்காக மறைமுகமாக தி.மு.க.வின் உதவியையும் நாடி வருவதாக தகவல்கள் வருகிறது. கொங்கு மண்டலத்தில் தி.மு.க. கோலோச்ச வேண்டும் என முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்திருப்பதோடு, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். ஆனால், அந்த வியூகங்களை எப்படியெல்லாம் தவிடு பொடியாக்க முடியும் என கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருகிறார் கே.சி.கருப்பண்ணன்.

எனவே, பவானி தொகுதியைப் பொறுத்தளவில் கே.சி.கருப்பண்ணனுக்கு சற்றும் சளைக்காத அளவில் அரசியல் அனுபவமும், பணபலமும், சமுதாய பலமும் படைத்த ஒருவரை களத்தில் இறக்கினால், 50 ஆண்டுகால தி.மு.க.வினரின் கனவு நனவாகும். மண்டலப் பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி பவானி தொகுதியில் நடக்கும் உள்ளடி வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மீண்டும் பவானி தொகுதி அ.தி.மு.க. வசமாகிவிடும். முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் இன்னும் தீவிரமாக, நேரடியாகவே கவனம் செலுத்த வேண்டும்.’’ என்றனர்.
அடுத்து கோபி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் அதுவும் அ.தி.மு.க.வின் கோட்டையாகத்தான் விளங்கியது. சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து விலகிய செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். எப்படியாவது கோபி தொகுதியில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார். அ.தி.மு.க. தலைமையும் செங்கோட்டையன் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. எனவே, செங்கோட்டையனுக்கு எதிராக பலமான வேட்பாளரை களமிறக்க காய் நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில்தான் அ.தி.மு.க., த.வெ.க.வை வீழ்த்தி 25 ஆண்டுகால கனவை நனவாக்கும் வகையில் கோபிலும் ஒரு பலமான வேட்பாளரை தி.மு.க. தலைமை களமிறக்க வேண்டும்’’ என்றனர்.
50 ஆண்டுகால கனவையும், 25 ஆண்டுகால கனவையும் நனவாக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்..?
