புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி திடீரென விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதையடுத்து பாஜக நிர்வாகிகள் அவசரமாக டெல்லி விரைந்துள்ளனர்.

புதுச்சேரியில் பாஜக முதல் முறையாக கூட்டணி அரசில் கடந்த 2021ம் ஆண்டு இடம் பெற்றது. ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஐந்து ஆண்டு ஆட்சி நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், கூட்டணி கட்சியான பாஜகவிற்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ள. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது முதல்வர் ரங்கசாமி சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.

நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. மாறாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கையை பாஜக ஏற்காததால் இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட போவதாக கூறினார்களாம். எனினும் தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று காலை 8.30 மணிக்கு என்.ஆர்.காங்கிரசார் வருகைக்காக காத்திருந்தார். 10.30 மணி வரை காத்திருந்தும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தரப்பில் யாரும் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அவருடன் பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் லாஸ்பேட்டையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை முதல்வர் ரங்கசாமி இல்லத்தில் ரகசியமாக நடந்தது.

பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘தேர்தலை சந்திக்க என்.ஆர். காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. கூட்டணி குறித்து பிறகு சொல்கிறேன்’’ என்றார். பா.ஜனதாவுடன் கூட்டணி தொடர்கிறதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ உரிய நேரத்தில் பதில் சொல்கிறேன்’’ என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகுகிறதா? என்ற விவாதம் அதிகமாகி உள்ளது.

புதுச்சேரி என்.டி.ஏ. கூட்டணியில் புயலைக் கிளப்பியதற்கு யார் காரணம் என அங்குள்ள முக்கிய அரசியல் புள்ளியிடம் பேசினோம். ‘‘சார், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் மார்ட்டின் ‘லட்சிய ஜனநாயக கட்சி’யை தொடங்கினார். கட்சி தொடங்கியவுடனேயே ‘அடுத்த முதல்வர் நான்தான்’ என்ற தோரணையில் பேசி வந்தார் ஜோஸ் மார்ட்டின். சிங்கப்பூரையும், புதுச்சேரியையும் ஒப்பிட்டுப் பேசி, ‘தன்னுடைய கட்சி ஆட்சியைப் பிடித்தால் பாண்டிச்சேரியை குட்டி சிங்கப்பூர் ஆக்குவேன்’ என்ற வாக்குறுதியையும் கொடுத்தார். தவிர, முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

புதுச்சேரியில் ‘இந்திய ஜனநாயகக் கட்சி’யின் அசுர வளர்ச்சியை ‘மேலிடமும்’ கவனிக்காமல் இல்லை. தமிழகத்தில் த.வெ.க.வை என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டுவர மேலிடம் கடுமையாக முயற்சித்தது ஆனால், முடியவில்லை. பாண்டிச்சேரியில் ஜோஸ் மார்ட்டினின் ‘இந்திய ஜனநாயக கட்சி’யை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்தது ‘மேலிடம்’! சமீபத்தில் காரைக்கால் வந்த அமித் ஷாவை ஜோஸ் மார்ட்டின் சந்தித்தபோது, ‘முதல்வர் ரங்கசாமியை நீங்கள் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, அவரைப் போய் சந்தியுங்கள்’ என ‘ஸ்ட்ரிக்’ உத்தவை போட்டிருக்கிறார். அதன்பிறகுதான் என்.டி.ஏ. கூட்டணியில் ‘இந்திய ஜனநாயகக் கட்சி’ இணைந்திருக்கிறது.

பா.ஜ.க.வின் வேட்பாளர்களுக்கும் ஜோஸ் மார்டின் செலவு செய்வதாக ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல்! இது புதுச்சேரி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு கிடைத்த ஒரு ‘குட் நியூஸ்’! இந்த நிலையில்தான் ‘என்னை கடுமையாக விமர்சித்தவரை எப்படி கட்சியில் சேர்க்கலாம். எனது அரசியல் அனுபவம் என்ன? நேற்று மழையில் பூத்த காளானுக்கு இவ்வளவு முக்கியத்துவமா?’ என குமுறிக்கொண்டிருந்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி!

தவிர, புதுச்சேரியில் ஜோஸ் மார்ட்டின் கட்சி வளர்வதை முதல்வர் ரங்கசாமி விரும்பவில்லை. இதனால் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அதேபோல் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா அறிவித்துவிட்டார். ஆனால் ரங்கசாமியிடம் லட்சிய ஜனநாயகக் கட்சி கூட்டணியில் இணைந்திருப்பதாக பாஜகவின் நிர்வாகி நிர்மல் குமார் சுரானா கூறி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி, லட்சிய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், நாங்கள் வெளியேறுவோம் என்று பாஜகவிடம் கூறி இருக்கிறார். இதனால் அமித்ஷா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் பாஜகவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ரங்கசாமி தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை கூட்டணி முறியும் பட்சத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே ரங்கசாமி தரப்பில் பாஜகவிடம், மாநில அந்தஸ்து வழங்கவும், லாட்டாரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் கட்சிக்கு சீட் தரக்கூடாது என்பதும் டிமாண்ட்டாக இருக்கிறது.

ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் தவெக நெருக்கம் காட்டி வருகிறது. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ரங்கசாமி இருவரும் நெருங்கிய நண்பர்கள். விஜய் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் கூட ரங்கசாமியை விமர்சிக்கவில்லை. இதனால் புதுச்சேரி அரசியலும் பரபரப்பாகி இருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal