ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இதுநாள்வரை தி.மு.க. வெற்றிபெற்றதில்லை. பெருந்துறை தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.கவே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, முதன்முறையாக தி.மு.க. வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 1957ல் இந்திய பொதுவுடைக் கட்சி வேட்பாளர் என்.கே.பழனிசாமி வெற்றி பெற்றார். இதன் பிறகு மூன்று முறை இந்திய பொதுவுடமைக் கட்சியும், காங்கிரஸ் ஒரு முறையும், அ.தி.மு.க. 9 முறை வெற்றி பெற்றிருக்கிறது.

அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் தி.மு.கவை வெற்றி பெற வைக்க செந்தில் பாலாஜியை களத்தில் இறக்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். எனவே, பெருந்துறை தொகுதியை தி.மு.க. கைப்பற்றுமா? என்பது குறித்து தொகுதி நிலவரங்களை அலசினோம்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் பிரதானமாக இருப்பவர் முன்னாள் அமைச்சரும், 10 வருடம் பெருந்துறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவருமான தோப்பு வெங்கடாச்சலம். அ.தி.மு.க.வில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்து மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். ஏற்கனவே, இப்பகுதியில் மக்கள் செல்வாக்கு மிகுந்தவராக காணப்படுகிறார்.
இந்த முறை எப்படியாவது திமுக சட்டமன்ற உறுப்பினரை இந்த தொகுதியில் இருந்து கொண்டு வர வேண்டுமென முதல்வர் ஆசைப்படுகிறார். அந்த நம்பிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் தி.மு.க.வில் வேலை பார்த்து வருகிறார் தோப்பு வெங்கடாச்சலம். அதில் அவருக்கு தொகுதியில் அனைத்து கட்சி மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. கட்சி பாகுபாடு இல்லாமல் தன்னைத் தேடி வருகிறவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்துகொண்டிருக்கிறார்.

பெருந்துறை தொகுதியைத் தாண்டி ஈரோடு முழுவதுமே இவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. மேலும் எந்த குற்றச்சாட்டுக்கும் இதுவரை ஆளாகாதவர் பெரும்பாலும் அரசு சம்பந்தமான உதவிகளை எந்தவிதமான ஆதாயங்களையும் இல்லாமல் செய்து கொடுப்பவர். பொதுவான மக்கள் பிரச்சனை என்று வந்து விட்டால் களத்தில் நின்று மக்களுக்காக குரல் கொடுப்பவர். இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் பெருந்துறை தொகுதி நிச்சயம் தி.மு.க. வசமாகும். இந்தத் தகவலைத்தான் உளவுத்துறையும், முதல்வர் மாப்பிள்ளை நடத்தும் ‘பென்’ அமைப்பும் ரிப்போர்ட்மாக மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் தோப்பு வெங்கடாச்சலத்தை களத்தில் இறக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார். தவிர, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கே.கே.சி,பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு ந பெரியசாமி போன்றவர்களும் கேட்பதாக தெரிகிறது.

பெருந்துறை தொகுதி மக்களிடம் பேசியபோது, ‘தோப்பு வெங்கடாச்சலம் கொண்டு வந்த கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனையை தீர்த்திருப்பதாகவும், இந்தத் திட்டம் கொண்டு வராமல் இருந்திருந்தால், தொகுதியில் மிகப்பெரிய குடிநீர் பிரச்சனை வந்திருக்கும் என்பது பொதுமக்கள் கருத்தாக இருக்கிறது. மேலும் மக்கள் மனதில் பதியக்கூடிய அளவில் பல்வேறு திட்டங்களை தோப்பு வெங்கடாச்சலம் கொண்டு வந்திருப்பது இவருக்கும் சாதகமாக இருக்கிறது. எனவே, தோப்பு வெங்கடாச்சலம் போட்டியிட்டால் தி.மு.க.வின் வெற்றி நிச்சயம்’ என்றனர்.
அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு சீட்டு கொடுக்கக் கூடாது என சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுத்துரை, முன்னாள் தொகுதி செயலாளர் கந்தசாமி, முன்னாள் யூனியன் வைஸ் சேர்மன் சாமிநாதன் தலைமையில் எடப்பாடியாரை சந்தித்து தங்களது குமுறல்களை கொட்டியிருக்கின்றனர்.
ஜெயக்குமாருக்கு வாய்ப்பு கொடுத்தால் கட்சிக்காரர்கள் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். ஜெயக்குமார் யாரையும் மதிப்பதில்லை. நாலு வருடமாக தொகுதிக்குள் சென்று வேலை பார்க்கவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆனால் ஜெயக்குமார் தரப்பினரோ, ‘யாரைப் பிடித்து எப்படி சீட் வாங்கவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மீண்டும் அண்ணனுக்குத்தான் சீட்’ என அடித்துக் கூறி வருகின்றனர்.ஜெயக்குமாருக்கு அடுத்தபடியாக ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் எப்படியாவது இந்த முறை வாங்கி விட வேண்டும் என்று கடும் முயற்சியில் இருக்கிறார். அடுத்து நாடாளுமன்றத்தில் களமிறங்கிய அருணாச்சலம் இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். காரணம் மேல்மட்டத்தின் ஆசி இவருக்கு பலமாக இருப்பதாகவும் ஒரு தகவல்!
பவானி தொகுதியை பொறுத்தவரையில். ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் சேகர் ஆகிய மூவரில் ஒருவருக்கு வாய்ப்பு இருக்கும் என பேசப்படுகிறது. பொதுவாக பவானி தொகுதியில் தேர்தலில் போட்டியிட கடந்த காலங்களில் பெரிய அளவு போட்டி திமுகவில் இருக்காது. இந்த முறை உளவுத்துறை ரிப்போர்ட் தி.மு.க.விக்கு மிகவும் சாதகமாக இருக்கிற காரணத்தால், போட்டி அதிகமாகியிருகறது.
அதிமுகவை பொறுத்தவரை எம்.எல்.ஏ. கருப்பண்ணனுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பாமகவும் இந்த தொகுதியை அழுத்தமாக கேட்கிறது. மேலும் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ். எடப்பாடி மூலம் கடுமையாக காய் நகர்த்தி வருகிறார். பவானியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த கருப்பண்ணன் தொகுதிக்கு குறிப்பிடக்கூடிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை என பரவலாக பேசப்படுகிற காரணத்தால் இங்கு திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
ஆக மொத்தத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் பவானி தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. முந்திச் செல்கிறது!
