அ.தி.மு.க. வேட்பாளராக நடிகை கௌதமி ராஜபாளையத்தில் களமிறங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அதிமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்க நடிகையும், கட்சி நிர்வாகியுமான கௌதமி இன்று கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக சார்பில் விருப்ப மனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மட்டும் 2,187 விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நேர்காணல் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், நேர்காணலை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை காலை, சேலம் மாநகர், சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிக்கும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமும் நேற்று நேர்காணல் நடந்தது.
இன்று விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுபினர் இன்று நேர்காணல் நடத்துகின்றனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்க நடிகையும், கட்சி நிர்வாகியுமான நடிகை கவுதமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
நடிகை கௌதமி முன்பு பாஜகவில் பொறுப்பு வகித்தார். 2021 சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நடிகை கவுதமியை பாஜக அறிவித்தது. அதற்காக தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே ராஜபாளையத்தில் வீடு எடுத்து குடியேறிய கவுதமி, அங்கேயே தங்கி இருந்து களப்பணியில் கவனம் செலுத்தினார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர் போல தொகுதி முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால், தொகுதி பங்கீட்டின் போது ராஜபாளையத்தை ராஜேந்திர பாலாஜிக்காக எடுத்துக்கொண்டு விட்டது அதிமுக.
இதனால் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்த கவுதமி, கடந்த 2024 அக்டோபரில் பாஜக-வில் இருந்து விலகினார். இந்நிலையில் அதிமுகவில் வரும் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியைப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கௌதமி விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், இன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.
