தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி விபரிதமாக மாறி, தி.மு.க., பா.ஜ.க.வினரிடையே நடந்த மோதல்தான் தமிழகத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.
நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மக்கள் சபை நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் கலந்துகொண்ட செந்தில்வேல் பேசும்போது பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் கிண்டல் செய்ததாகவும், இதனால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய செந்தில்வேல், படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு 50க்கு மேற்பட்டோருடன் வந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு டிவி சேனல்களும், அரசியல் பிரபலங்கள், ஒவ்வொரு கட்சியின் பேச்சாளர்களை அழைத்து விவாத நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில், மக்கள் சபை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசியல் கட்சிகளின் பேச்சாளர்கள் பேசுவது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றனர்.
அந்த வகையில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக, மக்கள் சபை நிகழ்ச்சியின் படப்பிடிப்பு எழும்பூரில் உள்ள தந்தி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பத்தரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் செந்தில்வேல் பேசும்போது பா.ஜ.க தரப்பில் கேலி கிண்டல் செய்யப்பட்டதாகவும், இதனால் கோபமான செந்தில்வேல் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல நிகழ்ச்சி முடிந்தவுடன் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும், செந்தில்வேல் 50-க்கும் மேற்பட்டோருடன் வெளியில் காத்திருக்கிறார் என்று கூறியதாகவும் நாம் தமிழர் கட்சியின் இடும்பானவம் கார்த்திக் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘செந்தில்வேல் வெளியேறியப் பிறகும், நிகழ்ச்சி தொடர்ந்தது. திமுகவின் தங்க.தமிழ்ச்செல்வன் பேசும்போதும் பாஜகவினர் கேலி, கிண்டல் செய்தனர். அவர் எதிர்வினையாற்றியதும் அடங்கினர். அதன்பிறகு, 1 மணிநேரம் வரை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்தப் பிறகு, வெளியில் செல்ல வேண்டாம் என எல்லோரும் அறிவுறுத்தப்பட்டார்கள். என்னவென்றால், 50க்கும் மேற்பட்டரோடு செந்தில்வேல் வெளியில் நிற்கிறார். வன்முறை ஏற்படும் சூழல் இருக்கிறதெனக் கூறினார்கள்.
செந்தில்வேலைப் பேசவிடாது இடையூறு செய்த பாஜகவினரின் செயல்பாடு அநாகரீகமானது. கண்டிக்கத்தக்கதுதான். அதற்கு திமுகவைச் சேர்ந்த குண்டர்களை அழைத்து வந்து வன்முறைக்கு வித்திடுவது எந்தவிதத்தில் சரியானது? திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் விவாதம் முடிந்ததும், பார்வையாளர்களிடம் இவ்வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்திவிட்டு, இயல்பானார்.
பத்திரிக்கையாளர் எனும் அடைமொழியோடு விவாதங்களில் பங்கேற்கும் செந்தில்வேல் திமுகவைச் சேர்ந்தவர்களைத் திரட்டி வைத்து வன்முறைக்குத் தூபம் போடுவதெல்லாம் என்ன மாதிரி அரசியல்? செந்தில்வேலுக்கு இந்தத் துணிவைக் கொடுத்தது யார்? கூச்சலிட்டு அநாகரீகமாக நடந்து கொண்டோரை ஜனநாயகரீதியில் கண்டிக்காது, ஆட்களைத் திரட்டி மிரட்டுவதும், தாக்குவதும்தான் சனநாயகமா?’’ என்று பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘வாதங்களை வாதங்களால் எதிர்கொள்ள முடியாமல், தொலைக்காட்சி விவாதத்தின் போது திமுக வன்முறையில் ஈடுபட்டது. திமுகவின் குண்டர்கள் என் மீதும், என்னைப் பாதுகாக்க வந்த எனது இளைஞர் அணி சகோதரர்கள் மீதும் கட்டவிழ்த்துவிட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருப்பதைக் குறிக்கிறது.
விவாதம் முடிந்த உடனேயே, எழும்பூரில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்கதமிழ்செல்வன் மற்றும் காவல்துறை. தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு, ‘நாங்கள் 10 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிக்கிறோம், நீங்கள் கிளம்புங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று குண்டர்கள் போலீசாரிடம் வெளிப்படையாகக் கூறியது அதிர்ச்சியளிக்கிறது. மிரட்டியபடியே, 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,
மேலும் இந்த வன்முறை திட்டமிட்டபடி திட்டமிடப்பட்டது. காவல்துறையின் முழு உடந்தையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு போர். குண்டர்களை கட்டவிழ்த்துவிட்டு அரசியல் செய்யும் திமுகவின் போக்கு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும். காயமடைந்த நமது இளைஞர் அணி உறுப்பினர்களின் இரத்தக்களரிக்கு இந்த திறமையற்ற அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்’’என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘இன்று, சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக இளைஞர் அணித் தலைவர் திரு. எஸ்.ஜி.சூர்யா அவர்கள் மீதும், இளைஞர் அணி நிர்வாகிகள் மீதும் திமுக ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஆட்சியின் கோரமுகத்தைக் கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், இதுபோன்ற வன்முறையினைக் கையில் எடுத்துள்ளனர். திமுகவினர். விவாதங்களில் மக்கள் பிரதிநிதியாகக் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட வன்முறையையே பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதற்குச் சமம். தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பகுத்தறிவு மேலோங்கும்போது, ‘‘திமுகவின் ஒரே பதில் வன்முறைதான். பி.ஜே.ஒய்.எம். மாநிலத் தலைவர் திரு.சூர்யாஎஸ்ஜி நடத்திய விவாதத்தின் போது நூற்றுக்கணக்கான திமுக குண்டர்கள் கொடிய ஆயுதங்கள் மற்றும் சோடா பாட்டில்களுடன் அவரையும் எங்கள் பாஜக காரியகர்த்தாக்களையும் தாக்க அரங்கிற்குள் நுழைந்தனர். அதிர்ச்சியூட்டும் விதமாக, தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவுவதற்காக மின் விளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டன. திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் நிலவும் கொடூரமான மற்றும் சட்டவிரோத சூழ்நிலை இதுதான், குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, காவல்துறை இயந்திரம் திமுக குண்டர்களைப் பாதுகாக்க அதிக நேரம் வேலை செய்கிறது. சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில், கருத்து வேறுபாடுகள் வலுக்கட்டாயமாக அடக்கப்பட்டு, தெருக்களில் பயம் ஆட்சி செய்த காலத்தில், திமுகவின் இருண்ட நாட்களை இது நினைவூட்டுகிறது’’ என கூறியுள்ளார்.
