2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்தால் மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் பெற முடியாமல், அ.தி.மு.க.வை மூன்றாவது இடத்திற்கு போகச் செய்துவிடுவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! காரணம் முக்கியமான மூன்று சமுதாய வாக்குகளை இழக்கப் போகிறார் என்கிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை இன்று சந்தித்தார். இச்சந்திப்பில் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா விரிவாக கேட்டறிந்தார். அதிமுக-பாஜக கூட்டணி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எடப்பாடி உறுதியாக தெரிவித்தார்.

கூட்டணியில் பல கட்சிகள் இணையவுள்ளதாகவும், இது வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றும் கூறினார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.டிடிவி தினகரன் கூட்டணியில் இணைவாரா என்ற கேள்விக்கு, கூட்டணி இன்னும் வலுவடையும், அது நடைபெறும் போது அனைவரையும் அழைத்து தெரிவிப்பேன் என்று எடப்பாடி பதிலளித்தார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் சசிகலா கூட்டணியில் இணைவது குறித்து திட்டவட்டமாக மறுத்தார்.
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா சேர வாய்ப்பில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன் என்று கூறினார். ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்று எடப்பாடி வலியுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை ஆள டெல்லி முயற்சிப்பதாக அமித் ஷா பேசியதாக தவறான செய்தியை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

இது போன்ற தவறான தகவல்களை மக்களிடம் பரப்புவதால் திமுகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலைக் காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார். திமுகவை வீழ்த்தி 2026இல் அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி திட்டவட்டமாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமி எப்படி தி.மு.க.வை வீழ்த்தப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘சார், தன்னை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தவருக்கே அ.தி.மு.க.வில் இடமில்லை என்கிறார். அதே போல், காமராஜருக்கு (நாடார்) பிறகு தங்கள் சமுதாயத்தில் (முக்குலத்தோர்) ஒருவர் முதல்வராகியிருக்கிறார் என்று அச்சமுதாயத்தினர் பெருமையாக பேசி வந்தனர்.
அதாவது, ஓ.பி.எஸ். யாருக்கு செய்தாரோ இல்லையோ? ஆனால், முக்குலத்தோர் சமுதாயத்தினர் அடர்த்தியாக வசிக்கும் தென்மாவட்ட மக்களின் முகமாக திகழ்ந்து வருகிறார். அவரையே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து புறக்கணித்து வருகிறார். அதாவது, அச்சமுதாயத்தைச் சேர்ந்த பலரை எடப்பாடி பழனிசாமி பதவி கொடுத்து வைத்திருந்தாலும், தென் மாவட்ட மக்களின் மத்தியில் எடுபடவில்லை.
அதே போல் டெல்டா மக்களின் முகமாக இருக்கும் சசிகலாவிற்கும் அ.தி.மு.க.வில் இடமில்லை என்கிறார். எனவே, டெல்டா பகுதியிலும் எடப்பாடி பழனிசாமிக்கு 2026ல் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் முக்குலத்தோர் சமுதாயத்தினர்.
அ.தி.மு.க. கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்திற்கு வருவோம். அங்கு எடப்பாடியின் சம்மந்தி உறவுக்காரரான முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் அதிகாரத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏற்கனவே தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.விற்கு போய்விட்டார். கொங்குமண்டலத்தின் முகமாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் த.வெ.க.விற்கு போய்விட்டார். செங்கோட்டையனுக்கு செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ, அ.தி.மு.க.வால் அவரை தக்க வைக்க முடியவில்லையே? இதனால் கொங்கு மண்டலத்திலும் எடப்பாடிக்கு செல்வாக்கு சரிந்து வருகிறது.

மத்திய மாவட்டமான திருச்சிக்கு வருவோம். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது முத்தரையர் சமுதாயத்தினர்தான். ஆனால், அ.தி.மு.க.வில் சமீபகாலமாக முத்தரையர் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குமுறுகின்றனர். காரணம், எடப்பாடியின் நிழாலாக வலம் வருபவர், தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முத்தரையர் சமுதாயத்தினரை முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறாராம். இப்படி எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக கட்சியை வழிநடத்துவதால், 2026ல் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாது’’ என்றனர்.
இதற்கிடயே, ஒருங்கிணைந்த பா.ம.க.வின் வாக்குகளை பெற முடியாததால், எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியிலேயே வெற்றி பெறுவது சிரமம்தான். காரணம், எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸிடம் இருக்கிறார்கள்.
