மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளிடம் திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களும், இடைத் தரகர்களும் சிறுநீரக முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்த முடியாததால், தனது சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வுத் துறையினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக திருச்சிக்கு வந்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, தமிழக சுகாதாரத் துறை சிறப்புக் குழு அமைத்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மருத்துவம் – & ஊரக நலத்துறை கூடுதல் இயக்குநர் பிரகலாத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், கண்காணிப்பு அதிகாரி, நிர்வாக அதிகாரி, இணை இயக்குநர் நிலையில் உள்ள அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். மகாராஷ்டிர சம்பவத்துக்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அவர்கள் விசாரிப்பார்கள்.
விவசாயிகளை குறிவைத்து இத்தகைய மோசடி நடக்கிறதா என்பதையும் ஆய்வு செய்யவுள்ளனர். அதுதொடர்பான ஆய்வறிக் கையை விரைவில் அக்குழு அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இதன் பின்னணியை விசாரித்தோம். ‘‘திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில்தான் ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சையில் தில்லு முல்லு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததது.
மகாராஷ்டிர மாநில விவகாரமும் அந்த மருத்துவமனையில்தான் நடந்ததாம். இதில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. அமைச்சரின் மருமகனும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்தப் பின்னணியில் தான் தமிழக அரசு குழு அமைத்திருக்கிறது’’ என்றனர்.
இந்த விவகாரத்தில் விரைவில்¢ அமலாக்கத்துறை உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!
