கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவபார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து உள்ளனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுஉள்ளது. இந்நிலையில் கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. வரும் 12-ந்தேதி நேரில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருப்பதன் பின்னணி குறித்து பேசினோம். ‘‘சார், இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களின் காலவரிசையை திரட்டியுள்ளனர். பின்பு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள், “விஜய் ‘ஜனநாயகன்‘ நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார். மலேசியா நிகழ்விற்கு கூட முதல்நாள் சென்றுள்ளார். ஆவர் படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது’’
“ஆனால், அவர் ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் காட்டுவதற்கு இதை வேண்டுமென்றே செய்தாரா? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?“ என அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. கரூர் வழக்கு தொடர்பாக நடிகர் விஜய்க்கு பொங்கல் பண்டிகைக் காலத்தில் சரியாக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் விஜய் பொங்கலை டெல்லியில் கொண்டாடினாலும் அதிசயம் இல்லை’’ என்கிறார்கள்.
தவிர, ‘‘இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டிய அஜித்குமார், முக்கிய சாட்சியாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த நாளில் நடந்த நிகழ்வுகளின் வரிசையை அஜித்குமாரிடம் விரிவாகக் கேள்வி கேட்டுள்ளனர். அன்றைய தினத்திற்கான அசல் திட்டம் என்ன, கரூருக்கு பயணிக்க டிரைவருக்கு எப்போது அறிவுறுத்தல்கள் கிடைத்தன, மற்றும் அவர் சம்பவ இடத்தை எப்போது அடைந்தார் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. காவல்துறை அவருக்கு ஏதேனும் வழிமுறைகளை வழங்கியதா அல்லது வாகனத்தை சாலையின் எதிர் திசையில் நிறுத்தும்படி யார் அறிவுறுத்தினார் என்றும் விசாரிக்கப்பட்டது. பிரச்சார வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டச் சொன்னது யார், சம்பவம் நடந்தபோது அவர் வாகனத்திற்கு முன்னால் தனிப்பட்ட முறையில் எதைக் கண்டார் என்பதும் விசாரணையின் ஒரு பகுதி.
சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் வந்தடைந்தது குறித்தும் சிபிஐ கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கெல்லாம் அஜித் குமார்.. விஜய்க்கு எதிராக சாட்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய்க்கு சிக்கலை ஏற்படும் சில கடுமையான பதில்களை அவர் கூறியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார், அவருக்கு நிலைமை தெரிந்ததா, சூழ்நிலை மோசமாக இருந்தபோதிலும் ஏன் பேச்சு தொடர்ந்தது என்றும் அஜித்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
வாகனத்திற்கு முன்னால் நடந்த சம்பவம் குறித்து விஜய்க்கு யார் தகவல் தெரிவித்தனர் என்பதை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதில் விஜய்யை சிக்க வைக்கும் சில பதில்களை அவர் அளித்துள்ளாராம். கூடுதலாக, அஜித்குமாரும் விஜயும் தவிர, சம்பவம் நடந்தபோது வாகனத்திற்குள் யார் யார் இருந்தார்கள் என்று அடையாளம் காட்டும்படி அஜித்குமாரிடம் கேட்கப்பட்டு உள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் பங்கு மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து இதில் கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த விசாரணையில் 90-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அஜித்குமார் அளித்த பதில்கள் மற்றும் விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கலாம்’’ என்றார்கள்.
