‘‘நாள்தோறும் காலையில், கட்சியினரால் எந்த புது பிரச்னையும் உருவாகி இருக்கக் கூடாது என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறேன். அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் ஆக்கி விடுகின்றன. பேச்சில் அனைவரும் அதிக கவனமாக இருக்க வேண்டும்’’ என கடந்த 2022ம் ஆண்டு மேடையிலேயே பேசி தனது வருத்தத்தைப் பதிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில்தான், கோலப்போட்டியில் பங்கேற்க வந்த கும்மிடிப்பூண்டி தி.மு.க., – எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அவைத்தலைவரை கன்னத்தில் அறைந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தி.மு.க., – எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கோவிந்தராஜன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலராக இருந்த இவரின் பதவி கடந்தாண்டு பறிக்கப்பட்டு, மீஞ்சூர் ஒன்றிய செயலராக இருந்த ரமேஷ்ராஜாவிடம் வழங்கப்பட்டது. அப்போது முதல், இருவரும் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.

ஒருவர் பங்கேற்கும் நிகழ்ச்சியை மற்றொருவர் தவிர்ப்பதும், வெவ்வேறு நேரங்களில் வருவதுமாக இருந்தனர். இதனால் தி.மு.க.,வினர் யார் பக்கம் செல்வது என தெரியாமல், விழிபிதுங்கி இருந்தனர். இந்நிலையில், பெரியபாளையம் அடுத்த, குமரப்பேட்டையில் நேற்று, கட்சி சார்பில் கோலப்போட்டி நடந்தது. இதில் எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜா மற்றும் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிவில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், எம்.எல்.ஏ., கோவிந்தராஜனிடம் சென்று, ‘ஒன்றியத்தில் நடக்கும் கட்சி விழா குறித்து தனக்கு எதுவும் தெரிவிப்பதில்லை’ என கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், முனிவேல் கன்னத்தில், ‘பளார், பளார்’ என அறைந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பொறுப்பாளரின் ரமேஷ்ராஜாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலப்போட்டி விழாவில் ஒன்றிய அவைத்தலைவரை, கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ., கோவிந்தராஜனை கண்டித்து, திருநிலை கிராமத்தில், முனிவேலின் ஆதரவாளர்கள் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘‘தி.மு.க., தலைமை, இப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் சட்டசபை தேர்தலில் இதன் பலன் எதிரொலிக்கும்’’ என கோஷமிட்டனர். சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.,வில் நடக்கும் கோஷ்டி மோதல்கள், கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதல்வரின் தூக்கத்தை நிர்வாகிகள் தொலைத்துவிடுகிறார்களே என அறிவாலயத்திலிருந்தும் குரல்கள் எழ ஆரம்பித்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal