கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு ஜனவரி மாதத்தில் சிபிஐ சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணை வளையத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் விஜய்யிடம் விசாரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இது பற்றி ஓய்வு பெற்ற சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

‘‘செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐபிஎல் அதிகாரி சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது.

ஏற்கனவே கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், தற்போது இந்த விசாரணை அடுத்தக் கட்டத்தை எட்டி இருக்கிறது. அதேபோல் கரூரிலேயே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். தற்போது இவர்கள் மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

அதற்கேற்ப நேற்று காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான 4 பேரிடமும் சுமார் 7.30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2வது நாளாக சிபிஐ விசாரணைக்கு இவர்கள் 4 பேரும் ஆஜராக உள்ளனர். காலை 11 மணிக்கு ஆஜராக இருக்கும் நிலையில், இன்னொரு முக்கிய தகவலும் வெளியாகி இருக்கிறது. இன்றைய விசாரணையில் கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோரும் ஆஜராக இருக்கின்றனர். இந்த விசாரணையின் போது காவல்துறை தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகள், விதிகள் குறித்து கேட்டறிய உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் வீடியோக்கள் மூலமாகவும் சிபிஐ பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விரைவில் கைது நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக தவெக தலைவர் விஜய்யை விசாரணைக்கு அழைப்பதற்கான சம்மன் ஜனவரி மாதத்தில் அளிக்கப்படும்.

ஏனென்றால், கடைசியாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான் ஒரு விசாரணை என்பது முழுமையடையும். எனவே, கீழ்மட்ட விசாரணைகள் முடிந்த பிறகு, விஜய்யிடம் விசாரணை நடத்தி முடித்த பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் யார் பக்கம் தவறு இருக்கிறதோ, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal