அமித்ஷாவின் தமிழகம் வருகை தள்ளிப்போவதற்கான காரணம், தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டுச் செல்லலாம் என இருக்கிறாராம். அதன்படி அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடுகளும் முடிவுக்கு வந்துவிட்டதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன் வைத்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, எந்தெந்த தொகுதிகள் என்பதை பேசி முடிக்க குழுக்களும் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவும். நாம் தமிழர் எந்த தேர்தலிலும் கூட்டணி வைப்பதில்லை. தவெகவோ கூட்டணி வைத்தால் விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகள் வரலாம் என்பதால் அக்கட்சியை தவெக தன் கூட்டணியில் சேர்க்க இயலாத நிலை உள்ளது.
இந்த தேர்தலில் திமுக ஆட்சி அமையக் கூடாது என்பதற்காக அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் அண்மையில் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி தலைமை தரப்பு பேச்சுவார்ச்சை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
அப்போது எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு 170 தொகுதிகள், மீதமுள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்தாராம். அப்போது டெல்லி தலைமையோ அதெல்லாம் முடியாது! 150 தொகுதிகளில் நீங்கள் போட்டியிட்டுக் கொள்ளுங்கள். மீதமுள்ள 84 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடட்டும்.
அந்த 84 தொகுதிகளில் பாஜகவுக்கு 40 தொகுதிகளும், பாமகவுக்கு 15, தேமுதிகவுக்கு 10, அமமுகவுக்கு 8, மீதமுள்ள 11 தொகுதிகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம். இப்படி செய்தால்தான் நம்முடன் கூட்டணி பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வரும். அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும். தொகுதி கணக்கை பார்த்தால் தோல்விதான் கிடைக்கும் என பேசியதாக தெரிகிறது.
அப்போது கூட எடப்பாடி பழனிசாமி 40 தொகுதிகளை பாஜகவுக்கு கொடுக்க முன் வரவில்லை. வேண்டுமானால் 5 ஐ குறைத்து 35 தொகுதிகள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம். அதற்கு சற்று யோசித்த டெல்லி தலைமை, 35 தொகுதிகள் எங்களுக்கு ஓகேதான், ஆனால் அதில் 25 தொகுதிகள் எங்கள் சாய்ஸ்ஸாக இருத்தல் வேண்டும் என தெரிவித்திருக்கிறார்’’ என்றனர்.
இதற்கிடையே, இதற்கு எடப்பாடி பழனிசாமி டபுள் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் பாஜகவுக்கு கொங்கு, தென் மண்டலங்களில்தான் செல்வாக்கு அதிகம், இதனால் அந்த மண்டலங்களில் தொகுதிகளை பாஜக கேட்கக்கூடும். அப்போது அந்த மண்டலங்களில் விருப்பமனு கொடுத்த அதிமுகவினர் அதிருப்தியடையக் கூடும் என தெரிகிறது.
அமித் ஷா கண்டிஷன்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஓகே சொல்லியிருக்கிறாராம். விரைவில் தொகுதிகளை முடிவு செய்த பிறகு, அமித் ஷாவின் தமிழகம் வருகைக்கான தேதியும் குறிக்கப்படும் என்கிறார்கள்.
