‘‘இந்துக்கள்,இந்து மதம், இந்து தெய்வங்களுக்கு தொடர்ந்து வக்கிரத்துடன் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். திமுக அரசின் செயல்பாடுகள் கொடுங்கோல் மன்னன் அவுரங்கசீப்பின் ஆட்சியை நினைவுப்படுத்துகிறது’’ என காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக பா.ஜ.க.மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்!
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க.மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் பல நூற்றாண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. அன்னியர்கள் ஆட்சியின்போது அங்கு தீபம் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்ற இந்துக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். சட்டப் போராட்டமும் நடத்தி வந்தனர்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை செயல்படுத்த கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தீபம் ஏற்ற தடை விதிக்குமாறு கோவில் நிர்வாகமே உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அதை நிராகரித்த உயர் நீதிமன்றம் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனாலும் காவல்துறை அதை தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைகோரி திமுக அரசு மனு தாக்கல் செய்தது. அதை இரண்டு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல், நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்திய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரை தமிழக காவல் துறை கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இந்து கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றவே போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்கிறது திமுக அரசு. திமுகவின் மரபணுவிலேயே இந்து விரோதப் போக்கு இருப்பதால் இப்படி நடந்து கொள்கிறது. இந்துக்களுக்கு எதிராக கொடூரமான அடக்குமுறைகளை கையாண்ட அவரங்கசீப் போன்ற கொடூரமான முகலாய மன்னர்களின் ஆட்சியைப் போலவே திமுக அரசு உள்ளது. கொடுங்கோல் மன்னன் அவரங்கசீப் போலவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து கொள்கிறார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பதோடு, அதைத் தடுக்க ஆயிரக்கணக்கான காவல்துறையினரை திமுக அரசு குவித்துள்ளது. இதன் மூலம் மத மோதலை திமுக அரசு தூண்டுகிறது. மத மோதல் நடக்க வேண்டும். அதன் மூலம் சிறுபான்மை மத மக்களின் வாக்குகளை மொத்த அறுவடை செய்யலாம் கணக்கு என கணக்கு போட்டு திமுக அரசு அட்டூழியம் செய்து வருகிறது.
இந்திய அரசியல் சாசன சட்டப்படி, மதச்சார்பற்ற அரசாங்கத்தை நடத்த வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசாங்கம், இந்துக்கள் இந்து மதம் இந்து தெய்வங்களுக்கு எதிராக, சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, மதவெறியோடு, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு, மக்களை காக்க வேண்டிய ஒரு அரசாங்கமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுத்தக்கூடிய, கலவரத்தை உருவாக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவது கடும் கண்டனத்துக்குரியது.
திமுக அரசின் இந்த அடக்குமுறை, அராஜகங்கள் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தீபம் ஏற்றக் கூட உரிமை மறுக்கும் திமுக அரசின் கோர முகம் மக்களிடம் அம்பலமாகியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கிடைக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு திருப்பரங்குன்றம் குன்று மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மலைக் குன்றுகளிலும் தமிழ் கடவுள் முருகனின் கொடி பட்டொளி வீசி பறக்கும்’’ என அதில் கூறியிருக்கிறார்.
