பீகார் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணி வகிக்கும் என்.டி.ஏ. கூட்டணி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. காங்கிரசோடு சேர்ந்து தேஜஸ்வி யாதவும் காணாமல் போயிருக்கிறார்.
பீகார் என்றாலே நிதிஷ் குமார் , நிதிஷ் குமார் என்றாலே பீகார் என கூறும் அளவுக்கு தன்னுடைய பதவியை தக்க வைத்துள்ளதோடு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த தலைவராக திகழ்கிறார். நிதிஷ் குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்துவிட்டார். தற்போது 10ஆவது முறையாக பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த 10 தேர்தல்களிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.
நிதிஷ் குமார் பீகார் மாநில சட்ட மேலவை உறுப்பினராகவே இருந்து ஒன்பது முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர். நிதிஷ்குமார் இந்த முறையும் தேர்தலில் போட்டியிடவில்லை. பீகார் சட்ட மேலவை உறுப்பினராக இருப்பதால் நிதிஷ்குமார் 10ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடாமலேயே முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார் . நிதிஷ் குமாரை பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜனதா கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார் . அந்த தேர்தலில் அவருக்கு தோல்வி தான் கிடைத்தது. அடுத்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார். 1985 ஆம் ஆண்டில் ஹர்ணாத் தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றி வாகையை சூடினார்.
ஐந்து முறை மக்களவை பதவி, 10 முறை முதலமைச்சர் பதவி , காங்கிரஸுடனும் ,பாஜகவுடனும் மாறி மாறி கூட்டணி என பீகார் தன் கைவிட்டு போகாமல் இருப்பதை உறுதி செய்தவர். முதன்முறையாக நிதிஷ்குமார் 2000 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அந்த பதவி காலம் 7 நாட்களே நீடித்தது. பின்னர் 2005 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 9 முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்துள்ளார்.
இத்தனை ஆண்டு காலம் பீகார் மாநில முதலமைச்சராக தன்னுடைய அரியணையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்து இருக்கிறார் என்பதே இவரது சாமர்த்தியம். இத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த போதும் இவரின் சொத்து மதிப்பு வெறும் 1.64 கோடி ரூபாய் தான் என்றால் நம்ப முடிகிறதா.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பீகார் மாநில அரசு வெளியிட்ட தகவலின்படி நிதிஷ்குமாரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 16.97 இலட்சம் ரூபாய். இதில் ரொக்கமாக இருக்கும் 21,000 ரூபாய் பணத்தை கையில் வைத்திருக்கிறார். வங்கியில் டெபாசிட்டாக 60 ,811 ரூபாயை போட்டு வைத்திருக்கிறார் . இது தவிர நிலையான வைப்பு தொகை மற்றும் முதலீடுகள் என 16.97 இலட்சம் ரூபாய் வைத்திருக்கிறா.ர் அசையா சொத்துக்களாக 1.48 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு வைத்திருக்கிறார் .இதில் குடியிருப்புகள் மற்றும் நிலங்கள் அடங்கும்.
