‘‘பா.ஜ.க. தலைமை என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கச் சொன்னதால்தான், இணைப்பு குறித்து வலியுறுத்தினேன்’’ என செங்கோட்டையன் உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று (நவம்பர் 7, 2025) கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை (இ.பி.எஸ்) கடுமையாக விமர்சித்தார். “என்னைப் போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் இ.பி.எஸ் முதலமைச்சரானார். எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தது இ.பி.எஸ் என்று கூறுவது வேதனையளிக்கிறது. நாங்கள் முன்மொழியாவிட்டால் அவர் முதலமைச்சராகியிருக்கவே முடியாது“ என்று காட்டமாகப் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர் இ.பி.எஸ் என்றும், சசிகலாவின் முடிவால்தான் எல்லாம் நடந்தது என்றும் சுட்டிக்காட்டினார். கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் இ.பி.எஸ் சிபிஐ விசாரணை கோராதது ஏன் என்று கேள்வி எழுப்பிய செங்கோட்டையன், “எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் இ.பி.எஸ், கொடநாடு வழக்கில் மட்டும் ஏன் குரல் கொடுக்கவில்லை? இதிலிருந்து யார் திமுகவின் பி-டீம் என்பது புரியும்“ என்று குற்றம் சாட்டினார்.
2009-ல் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் இ.பி.எஸ், உழைத்தவர்களை மறந்து பணக்காரர்களுக்கு எம்.பி. சீட் கொடுத்தவர், சசிகலாவையே கொச்சைப்படுத்தியவர், நான்கரை ஆண்டு ஆட்சிக்கு உதவிய பாஜகவுக்கு துரோகம் செய்தவர் என்றும் விமர்சித்தார்.தவெக கொடியைப் பார்த்ததும் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக இ.பி.எஸ் கூறினார் என்று நினைவுகூர்ந்த செங்கோட்டையன், “ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒருவர் முன்னேற வேண்டுமானால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும், பிறர் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது“ என்று காட்டமாகத் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்றும் வலியுறுத்தினார். பாஜக தலைமை தன்னை அழைத்து அதிமுகவை ஒன்றிணைக்கச் சொன்னதாகவும், அதன்படி பிரிந்தவர்களை ஒன்றிணைய வலியுறுத்தியதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தான் எதுவும் செய்யவில்லை என்று இ.பி.எஸ் கூறுவது வேதனையளிப்பதாகவும் கூறினார். தனது ஆதரவாளர்கள் 14 பேர் நீக்கப்பட்டது அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல் என்றும் எச்சரித்தார். செங்கோட்டையனின் இந்தப் பரபரப்பு பேட்டி அதிமுக உட்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
