தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

த.வெ.க.விற்கு கூடும் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே, ‘கட்டுங்கடாத கூட்டம் அல்ல… கட்டுப்பாடற்ற கூட்டம்’ என்ற விமர்சனத்தை முன் வைத்தார். அந்தளவிற்கு விஜய்க்கு தமிழகத்தில் இளைஞர்கள் செல்வாக்கு இருக்கிறது.

இந்தநிலையில்தான் தி.மு.க. இளைஞரணியில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறாராம் உதயநிதி. அதாவது, வயதானவர்களுக்கும், ஆக்டிவாக இல்லாதவர்களையும் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, ஆக்டிவாக உள்ளவர்களை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி தி.மு.க. இளைஞரணி வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், ஏற்கெனவே ஒவ்வொரு பூத்துக்கும் இளைஞரணியைச் சேர்ந்த ஒருவரையும் தனிப்பட்ட முறையில் பாக முகவராக நியமனம் செய்திருக்கிறது திமுக. முன்பு ஒன்றிய, நகர,மாவட்ட அளவில் மட்டுமே இளைஞரணிக்கு பொறுப்பாளர்கள் இருப்பார்கள். அந்த நிலையை மாற்றி ஒன்றியங்களில் கிராமக்கிளை அளவில் இளைஞரணிக்கு ஒரு அமைப்பாளரும் 3 துணை அமைப்பாளர்களும் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.

இதேபோல் பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் இளைஞரணிக்காக ஒரு அமைப்பாளரும் 2 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதுபோலவே, நகரங்களில் ஒவ்வொரு வார்டுக்கும் இளைஞரணிக்கு ஒரு அமைப்பாளரும் 3 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மாநகராட்சிகளில் ஒரு வட்டத்துக்கு இளைஞரணிக்காக ஒரு அமைப்பாளரும் 5 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தும் விதமாக கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 4 முக்கிய மண்டலங்களில் விரைவில் இளைஞரணி மண்டல மாநாடுகள் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதனிடையே, புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்ட இளைஞரணியினர் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த வயதைக் கடந்தவர்களையும், ஆக்டிவாக செயல்பட மாட்டார்கள் என்று தெரியவருபவர்களையும் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். மண்டல மாநாட்டுக்கு முன்னதாக இதையெல்லாம் சரிசெய்து இறுதிப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என உதயநிதி கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறாராம்.

இதையடுத்து முதல் மண்டல மாநாடு நடைபெறும் கோயம்புத்தூர் மண்டலத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு தென்மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் நேரில் சென்று அங்குள்ள இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, ஆக்டிவாக செயல்படாத நபர்களையும் வயது வரம்பைக் கடந்தவர்களையும் கணக்கெடுத்து அவர்களை எல்லாம் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு தகுதியான நபர்களை பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளனர்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் இளைஞர்களை கவர உதயநிதியின் வியூகம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal