மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் வாய்ப்பு ஜாதகத்தில் இல்லை என்றார்கள்…. ஆனால், முதல்வரானார். இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

ஆனால், ஆருடக்காரர்களின் முகத்தில் இரண்டாவது முறையாக முதல்வராகி கரி பூசக் காத்திருக்கிறார் என தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் பதிவிட்டிருப்பதுதான் உடன் பிறப்புக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘தேரும்…நானும்..’’ என்ற தலைப்பில்…

‘‘அவருக்கு முதலமைச்சராகும் யோகம் ஜாதகத்திலேயே இல்லை என்றுகுறி சொன்ன பலரையும் கோமாளியாக்கியவர்”..

இப்போதும்
“ஒருமுறை ஆட்சிக்கு வந்த பின்
தொடர்ந்து அது இரண்டாம் தடவை
ஆட்சியை தக்கவைத்தது இல்லை” என
ஆருடம் சொல்பவர்களின் முகத்தில்
கரி பூசக் காத்திருப்பவர்…

எளிய மக்களின் மகிழ்வான
வாழ்வுக்கு தன் ஆட்சித் திறத்தால்
அள்ளித்தந்துள்ள
அநேக திட்டங்கள்…

மத்திய அரசின் வஞ்சகத்தை
நெஞ்சுரத்தால் எதிர்கொள்ளும் துணிவு உறுதி..

அண்ணா மற்றும் கலைஞரது அரசியல் அனுபவங்களை பக்கமிருந்து படித்த அனுபவம்…

கொள்கை கொண்டு அமைத்த கூட்டணியை நெறிசார்ந்து வழி நடத்தும் நேர்மை…

எதிரிகள் ஏவும் கணைகளை
கையில் பிடித்து காதுகுடையும்
பதறாத பண்பு கவனம் சிதறாத பக்குவம்..

மக்கள் தன்மீதும் தான் மக்கள் மீதும் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை..

வெறும் யூகங்களை மட்டுமே நம்பாது வியூகங்களால் வெற்றியை தொடர்ச்சியாக்கும் மதிநுட்பம் ..

இப்படி

அன்பாலும் அரவணைக்கும் பண்பாலும் படைநடத்தும் திறத்தாலும்…

பவள விழா கண்ட இயக்கத்தை பாரதத்தின் அரசியலையே தீர்மானிக்கும்…

சாதனைக் குவியாலாக்கி சரித்திரப் பெட்டகமாக்குகிறது…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது ஆட்சி அதிகார அரசியல் திராவிடத் தேரோட்டம் என்றால்..

அதில்

கூட்டத்தில் ஒருவராக நின்று வடம் பிடிக்கும் வாய்ப்பு நமக்கும் என்றால் அது வாழ்நாள் பாக்கியம் அல்லவா…

இப்படிக்கு
மருது அழகுராஜ்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal