தவெக நிர்மல் குமார் நீதிபதி செந்தில் குமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டதால் திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தவெக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்தியா முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு அக்டோபர் 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செந்தில் குமார், “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்க கூடாது.

கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) நிகழ்ந்துள்ளது. என்ன மாதிரியான கட்சி இது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?

ஏற்பாட்டாளர்கள், தலைவர், தொண்டர்களை, ரசிகர்களை, மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை” உள்ளிட்ட கருத்துகளைத் தெரிவித்து தவெகவை அதன் தலைவர் விஜயையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து, தவெகவினர் தொடர்ந்து சமூகவலைதளங்களில் நீதிபதி செந்தில் குமாரை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டுவந்தனர். அந்த வகையில் தவெக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். நிர்மல் குமார் நீதிபதியை விமர்சித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal