அ.தி.மு.க. & த.வெ.க. கூட்டணி அமைந்துவிடக்கூடாது. அப்படி அமைந்து விட்டால் அ.தி.மு.க. ஆட்சியமைத்துவிடும் என ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யை டி.டி.வி.தினகரன் கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் 41 நபர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பலர் தவெகவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

இதற்கிடையில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜக மற்றும் அதிமுக கொடிகளுக்கு மத்தியில் தவெக கொடியும் பறந்தது. தவெகவின் கொடியை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி , ‘‘அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் பாருங்கள், கொடி பறக்கிறது! பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்’’என்று கூறினார். இதற்கு தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்தனர். இது கூட்டணி அமைப்பதற்கான சிக்னல் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்தது. பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெக இடம்பெறுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘‘அதிமுக டீசர்ட் அணிந்து கொண்டு யாராவது மற்ற கட்சி கொடியை பிடிப்பார்களா? இதைக் கூட பழனிச்சாமி கம்பெனி ஒழுங்காக செய்யவில்லை. விஜய்யை கூட்டணிக்கு அழைப்பது எடப்பாடி பழனிச்சாமியின் தனிப்பட்ட உரிமை.

ஆனால் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதை விஜய் தெளிவாக கூறியிருக்கிறார் . அப்படி என்றால் விஜய்யின் தலைமையை ஏற்று அவர்களின் கூட்டணிக்கு செல்வதற்கு அதிமுக தயாராகிவிட்டதா? அந்த அளவுக்கு அதிமுக பலவீனம் ஆகிவிட்டது. பழனிசாமியை முதல்வராக்குவதற்காகவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார்’’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும் இது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் வந்து மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். முக்கியமான தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டு இப்பொழுது மீண்டும் இணைந்துள்ளார். இப்பொழுது விஜய் கூட்டணிக்கு வந்தால் பாஜகவை மீண்டும் கழற்றி விடுவார். பழனிசாமிக்கு நம்பிக்கை துரோகத்தை தவிர வேற தெரியாது’’ என அவர் தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரனின் பேச்சு பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையவேண்டும். அ.தி.மு.க. ஆட்சி அமையக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் டி.டி.வி.தினகரன். இன்னும் சொல்லப்போனால், ‘அம்மா’வின் பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு தி.மு.க.வை மீண்டும் அரியணையில் அமர்த்துவதற்கான வேலைகளைத்தான் மறைமுகமாக டி.டி.வி.தினகரன் திரை மறைவில் செய்து வருகிறார்.

இது அவருடைய செயல்பாடுகள் நடவடிக்கைகள் மூலமாகவே தெரிகிறது.

அதாவது, அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனும் கூட்டணியில் இருக்கக்கூடாது. த.வெ.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற எண்ணம் டி.டி.வி.க்கு இருக்கிறது என்பதுதான் அவரது பேட்டியின் மூலம் தெரியவருகிறது. ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக விடமாட்மோம்’ என்கிறார். அப்படியானால், ‘ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவாரா?’

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர் செய்த சித்து விளையாட்டுக்களால்தான் அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வை தனித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் சில காய்களை நகர்த்தி வருகிறார் டி.டி.வி.தினகரன்’’ என்றனர்.

இதைத்தான் ‘பிடீம்’ என்பார்களோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal