‘சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்’ – உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாக சிறுநீரகம் தானம் பெற்ற சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு, அதாவது திருச்சி மாவட்டம் மண்ணச்சல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவனுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்ல என வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்ததில், சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துவதற்கு நாங்கள் எதிர்க்கவில்லை. அதே வேளையில் அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதிலிருந்து அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நீதிமன்றம் குழுவை அமைத்தால் சரியானதாக இருக்கும்.
தற்போது நீதிமன்றம் தேர்ந்தெடுக்கக்கூடிய அதிகாரிகள் பல கி.மீ தொலைவான இடங்களில் இருந்து வருகிறார்கள். இது நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அரசுக்கு ஏற்படுத்தும். அதனால் தான் தமிழ்நாடு அரசு தரப்பில் அதிகாரிகளில் பெயர்களை பரிந்துரைக்கிறோம் அதிலிருந்து நீதிமன்றம் குழுவை அமைக்கட்டும் என்றனர்.
சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். அதிலிருந்து நாங்கள் முரண்படுகிறோம். சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசு வைத்திருந்த கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை. அதை வேளையில் சிறப்பு விசாரணை குழு அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கூறி இருந்த அந்த கருத்துக்களை நீக்குவதாகவும் உத்தரவிட்டு தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
