‘இட்லி கடை’ என்றதுமே நமது நினைவுக்கு வருவது கோவையின் கடைக்கோடி மலைக் கிராமமான வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலம்மாள் பாட்டி. ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று புகழ்பெற்றவர்… விருதுகளையும் பெற்றவர்.

கொரோனா காலத்தில் பாட்டியின் இட்லி கடை முடங்கியதால் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக உதவி செய்தார். தவிர, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடுகட்ட இலவசமாக நிலமும் கொடுத்தார்.

இந்த நிலையில்தான் தற்போது வெளியாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கையில், ‘‘தமிழக அரசு இட்லி கடை திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் கிராமப்புற மற்றும் அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக இட்லி கடை திரைப்படத்தைக் காணும் வகையில், நடிகர் தனுஷ் மற்றும் திரைப்படம் நிறுவனம் வழிவகை செய்ய வேண்டும்.

தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள ‘இட்லி கடை’ தமிழ் திரைப்படம் நம்முடைய சமூக, பண்பாடு, கலாச்சாரத்தின் ஆணி வேராக, நேர்மறை எண்ணங்களை விதைத்து, கலைத்திறன் மிக்க படைப்பாக, குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து வயதினரிடம் அகிம்சையை போதிக்கும் அற்புத படைப்பாக வெளிவந்துள்ளது.

மேலும் தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகளும் போதை கலாச்சாரமும் பாலியல் சீண்டல்களும், ரத்தமும், துப்பாக்கிச் சத்தமும் அதிகரித்து மாணவர்களை இளைஞர்களை சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ‘இட்லி கடை’ திரைப்படம் மனித நேயத்தை சொல்லித் தரும் வாழ்வியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

இந்தியாவின் உயிர்நாடியாக தூண்களாக விளங்கும் கிராமங்களின் ஆன்மீக வாழ்வியல் முறை, விவசாயத்தைத் தாண்டி சிறு,குறு சுயதொழில், நெசவுத்தொழில் உள்ளிட்ட மறைந்து வரும் அற்புத கை வினைஞர்களின் தொழில்களை உயிரோட்டமாகக் கொண்டு வாழ்ந்து வரும் குடும்பங்களில் உள்ள சுகம், துக்கம் சார்ந்த பிரச்சினைகள், அவர்களின் உறவுகளின் வலிமையான உயிரோட்டமான பாசமான இணைப்பு, ஒற்றுமை மற்றும் மனித நேயத்திற்கு இலக்கணமான அறிவியலைக் கடந்த வாழ்வியல் மூலமாக “இட்லி கடை” திரைப்படம் ஒரு இதமான, சுகமான அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கிறது.

நவீன காலத்தை கருத்தில் கொள்ளாமல், ஏற்றுக்கொள்ளாமல் பழமைவாதத்தைப் புகழ்ந்து பேசுகிறது என்று, இயந்திரத்தனமாக “இட்லி கடை” படத்தின் கருவை, கருத்தை, திரைக்காட்சிகளின் உயிரோட்டத்தை, கதாபாத்திரங்களின் எண்ணங்களை புரியாமல், தவறாக சிலர் பேசினாலும், இட்லி கடை திரைப்படம் படம் பார்க்கும் ஒவ்வொரு மாணவனின் இளைஞனை ரசிகனின் மனதில் உள்ள தீய எதிர்மறை எண்ணம் கொண்ட அழுக்குகளை, துவைத்து தூய்மையான சிந்தனையாக மாற்றி, தாய் தந்தை உறவின் புனிதம் குறித்தும், ஆன்மீக, இறை சிந்தனையின் வலிமை குறித்தும் அழுத்தமாக நம்மிடம் பதிய வைத்ததை மறுக்க முடியாது மறைக்க முடியாது.

நம்முடைய உடலிலும் உயிரிலும் கலந்துள்ள நாம் பிறந்த மண்ணை நேசிக்கும் எண்ணம், ஜாதி மதத்தை கடந்து நம்மைச் சுற்றியுள்ள சொந்தங்கள் உற்றார் உறவினர்களுடன் உள்ள ஆத்மார்த்தமான பந்தம் காப்பாற்றப்பட வேண்டும். அன்பிற்கும் பாசத்திற்கும் உறவுகளுக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் நியாயத்திற்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் “இட்லி கடை” திரைப்படம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

படம் முழுக்க கிராமத்து வாழ்க்கை, அமைதியான சூழல், அகிம்சையை அழுத்தமாக மனதில் பதிய வைத்து நகரும் திரை காட்சிகள், அப்பா செஞ்ச தொழிலை, பிடித்து, உணர்வுடன் மகன் செய்றது தவறில்லை. அப்பாவின் தொழிலை கற்றுக்கொண்ட மகன், தன்மானத்துடன் சுய கௌரவத்துடன், தன்னுடைய சுய தொழிலில் உச்சத்தை அடைவதற்கு எதுவுமே தடை இல்லை என்பதையும் எதார்த்த காலத்திற்கு ஏற்றார் போல மிகவும் பாசிட்டிவ் ஆக சொல்லப்பட்டிருக்கிறது.

இட்லி கடை படத்தில் உள்ள பல நல்ல அருமையான எதார்த்தமான நன்மையை வாழ்வியல் உண்மையை போதிக்கும் வசனங்கள், நம் கண்களை வேண்டுமானால் குளமாக்கலாம். ஆனால், நடைமுறையில் வளர்ச்சி என்ற மீனை அதில் பிடிக்க முடியாது என்று எதிர்மறை வியாக்கியானம் பேசி உச்ச நடிகர்கள் நடிக்கும் வன்முறை, பாலியல், போதை கலாச்சாரம் திருட்டு தொழிலை கற்றுக் கொடுக்கும் படங்களை தூக்கிப் பிடிக்கும் பித்துக்குளித்தனமான சுயநல விமர்சன மனநிலை மாற வேண்டும்.

அப்பா செய்த தொழிலை நான் செய்வேன்! எனது மகன் பேரன்களுக்கும் கற்றுத்தருவேன்” என்பது மாதிரியான இட்லி கடை படத்தில் வரும், உணர்ச்சிபூர்வமான யதார்த்த வசனங்களை, கடந்த காலத்தில் மூதறிஞர் ராஜாஜி சொன்னதையும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உருவாக்கிய விஸ்வகர்மா திட்டத்தையும் திசை திருப்பியது போல், தவறாக சித்தரித்து விமர்சனம் செய்யாமல், அவதூறு பரப்பாமல், கதையின் போக்கும், சொல்ல வந்த கதையும் வேறு என்பதை உணர வேண்டும். “இட்லி கடை” திரைப்படம் பல இடங்களில் குலத் தொழிலை ஊக்குவிக்கிறதா? என்று விகல்பமான கேள்விகளை கேட்கும் அறிவிலிகளை ஊக்குவித்து , இட்லி கடை திரைப்படத்தின் உண்மையான கருத்தியல் தாக்கத்தை கொச்சைப்படுத்தக் கூடாது.

சகிப்புத்தன்மை குறைந்து அழிந்து வரும் இந்த காலத்தில் அகிம்சையை பேசுவதோடு மட்டுமல்லாமல், அன்பால், அகிம்சையால் எதிரியை வெற்றி கொள்ளும் சிறப்பை வெளிப்படுத்தும் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

இட்லி கடை படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகனாக நடித்துள்ள தனுஷ், தான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கியுள்ள நடிகர் தனுஷ் அவர்களுக்கும் இந்த திரைப்படத்தில் உயிரோட்டமாக நடித்துள்ள ராஜ்கிரன் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் டெக்னீசியன்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு ரூபாய் இட்லி கடை பாட்டியின் துயரத்தை துடைத்த முதல்வர், ‘இட்லி கடை’ படத்திற்கு வரிவிலக்கு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal