அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த மருது அழகுராஜ் ‘அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரே த.வெ.க. கொடியை அசைக்கிறார்’ என்பதை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்தான் விஜய் த.வெ.க.வினருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, ‘‘கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்’’ எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரபரக்கும் சூழலில் கூட்டணி தொடர்பாக இன்று மக்கள் மத்தியில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதேபோல் நேற்று நாமக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தவெக கொடியுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சார்பாக இந்த வரவேற்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு பக்கம் அதிமுக கொடி, இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி காட்டப்பட்டது. இதை பார்த்து எடப்பாடி பழனிசாமி ஆரவாரமாக கையசைத்து பேசினார். எடப்பாடி பழனிசாமி பேசும் நேரம் முழுக்க இரண்டு பக்கமும் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அசைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் உண்மையில் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தவெக கொடியை அசைத்தது யார் என்று கேள்வி நிலவி வருகிறது. அதிமுகவினர் பலர்.. இது தவெகவினர் கொண்டு வந்த கொடி, அவர்கள்தான் இந்த கொடியை அசைத்தது என்று கூறினார்கள். ஆனால் தவெகவினர் பலரும்.. ‘‘நாங்கள் கொடி கொண்டு வரவில்லை. எங்களுக்கு கரூர் விவகாரத்தில் அதிமுக உறுதுணையாக வந்து நின்றது. அவ்வளவுதான். அதற்கு நாங்கள் நன்றியோடு இருக்கிறோம். அதற்காக அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க முடியாது. அதோடு அந்த கொடியை நாங்கள் கொண்டு வரவில்லை. அதிமுகவினரே எங்களை போல கொடியை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.. எடப்பாடி பழனிசாமிதான் எங்களுடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயல்கிறார் .. அதனால்தான் இப்படி கொடியை வைத்து அரசியல் செய்கிறார்கள்’’ என்றனர் த.வெ.க.வினர்.
இதற்கு இடையே, ‘‘அதிமுக கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை எடுத்து செல்ல கூடாது, அங்கே தவெக கொடியை காட்ட கூடாது’’ என்று விஜய் கட்சி தொண்டர்களுக்கு நிர்வாகிகள் வழியாக வாய் மொழி உத்தரவிட்டு உள்ளாராம்.
நமது கட்சி சார்பாக யாரும் கொடியை எடுத்து செல்ல கூடாது. அதிகாரப்பூர்வமாக கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதனால் இப்போது மற்ற கட்சிகளின் கூட்டத்திற்கு நமது கொடியை எடுத்து செல்ல வேண்டாம். நாம் இப்போது தனியாகவே இப்போது அரசியல் செய்கிறோம். அதனால் மற்ற கட்சிகளின் கூட்டத்திற்கு கொடியை எடுத்து செல்ல வேண்டாம், என்று விஜய் கட்சி தொண்டர்களுக்கு நிர்வாகிகள் வழியாக வாய் மொழி உத்தரவிட்டு உள்ளாராம்
