பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (அக்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி என மொத்தம் 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாகவுள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ரவுடி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal