‘‘வரி ஏய்ப்புகள், ஊழல்களை களைய தமிழ்நாடு கேபிள் டி.வி. ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவேண்டும்’’ என தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஏ.என்.எஸ்.பிரசாத்!

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனங்கள், ஆப்ரேட்டர்கள் மற்றும் மக்களின் நலன் காக்க, வரி ஏய்ப்பு, ஊழல்கள் களைய, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் அழிந்து வருவதை தடுக்க, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு கேபிள் டிவி ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும்.

மேலும் எந்த ஒரு தொலைக்காட்சி சேனலையும் அரசு கேபிள் டிவி நிறுவனம், தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள், கேபிள் ஆபரேட்டர்கள் சட்ட விரோதமாக, தங்களின் சுயலாபத்துக்காகவும் அரசியல் அழுத்தம் காரணமாகவும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தகுந்த காரணங்கள் இன்றி, மக்கள் சேவை கட்டணத்தை விரும்பி செலுத்தி வரும்போது, தங்களுடைய கேபில் இணைப்பிலிருந்து நீக்குவது சட்ட விரோதமானது என்பதை தமிழக அரசு பகிரங்கமாக அறிவித்து, தொலைக்காட்சி நிறுவனங்களின் தொழில், சட்ட உரிமையையும் மக்களின் அடிப்படை காட்சி உரிமையையும் பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை மாதம் ரூ.100 ஆக குறைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கேபிள் டிவி நிறுவனங்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் கேபிள் டிவி இணைப்புகளை முழுமையாக கணக்கெடுத்து கேபிள் டிவி சேவை கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்.

கேபிள் டிவி சேவை கட்டணங்களுக்கு பொதுமக்கள் வழங்கும் சேவை கட்டணங்களுக்கு முறையான ரசீது வழங்குவதை கண்காணிக்க வேண்டும். கேபிள் டிவி கட்டணங்களுக்கு பொதுமக்களிடம் பெறப்படும் சேவை கட்டணத்தை மின்னணு முறையில் மாற்றி, மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி ஏய்ப்பை தடுத்து, மக்களால் பார்க்கப்படும் சேனலுக்கு மட்டும் கட்டணம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து ஆய்வு செய்து, மக்களின் உரிமையை காக்க வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான,அரசாங்க கணக்கில் வராத போலி கேபிள் டிவி இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழக அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கேபிள் டிவி சேவையில் பாதிக்கப்படும் பொது மக்களின் குறைகளை களைவதற்கு, புகார்களை பதிவு செய்து, தீர்வு பெறுவதற்கும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி ஏய்ப்பு, கேபிள் டிவி இணைப்புகள் குறித்த கணக்கீடு உள்ளிட்டவைகளில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்கு தமிழ்நாடு கேபிள் டிவி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் குறைந்த கேபிள் டிவி கட்டணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. ஆரம்ப காலங்களில் மக்கள் நலம் சார்ந்து தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்ததால் அரசு கேபிள் டிவி கேபிள் டிவி சேவை, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டதால் மக்கள் மிகவும் பயனடைந்தார்கள்.

2021 இல் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு குறைந்த சேவையில் உருவாக்கப்பட்ட திட்டம் கொள்ளை அடிக்கும் சேவையாக மாறிவிட்டது. திமுக ஆட்சியாளர்களுக்கு வேண்டிய மந்திர சக்தி மிக்க பினாமி நிறுவனத்திற்கு வாடகைக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசுக்கும் அமைச்சருக்கும் வேண்டிய நிறுவனம் என்பதால் செட்டப் பாக்ஸ் வாடகை மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முறையாக திட்டமிட்டு இருந்தால் தமிழக அரசு செலுத்தும் வாடகை பணத்தில் புதிய செட்டாப் பாக்ஸ் தமிழக மக்களுக்கு இலவசமாக அளித்து தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை லாபகரமான சேவை நிறுவனமாக உருவாக்கி இருக்கலாம்.

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ் வாடகை நிர்ணயத்தில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்துக்கு திட்டமிடாமல் இதுபோன்று வாடகை ஒப்பந்த முறையில் அமல்படுத்தியதன் மூலம் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் தமிழக அரசுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே உடனடியாக தமிழக முதல்வர் , தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள செட்டாப் பாக்ஸ் வாடகை ஒப்பந்த முறையை ரத்து செய்து, புதிய செட்டாப் பாக்ஸ் தமிழக அரசே குறைந்த விலையில் வாங்கி, தமிழக அரசுக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை தடுக்க வேண்டும்.

புதிய செட்டாப் பாக்ஸ் வாங்குவதற்கு உரிய கண்காணிப்புடன் ஊழல் நடக்கா வண்ணம் டெண்டர் அளித்துக் கொள்முதல் செய்ய வேண்டும். திமுக அரசுக்கு வேண்டிய தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் தமிழகத்தில் கேபிள் டிவி சேவையில் ஏகபோக சாம்ராஜ்யம் நடத்துவதால், அரசு கேபிள் டிவி முடக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணமின்றி, இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140+ஜிஎஸ்டி என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைந்த கட்டணம் ஆகும். குறைந்த கட்டணத்தில் அதிகமான சேனல்களை வழங்கி வருகின்றது என்று விளம்பரங்கள் செய்து செய்திகளை உருவாக்கி, தமிழக அரசு பெருமை பட்டாலும், அரசு கேபிள் டிவி நிறுவனம் துவங்கப்பட்ட போது 50 லட்சத்திற்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தன. இன்றைக்கு 15 லட்சத்திற்கும் குறைவான இணைப்புகள் மட்டுமே உள்ளன என்பதுதான் உண்மையான நிலவரம் ஆகும்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் அரசியல் தலையீடுகளால் நிர்வாக சீர்கேடுகளால், ஊழல் முறைகேடுகளால் தத்தளிக்கிறது. தமிழகம் முழுவதும், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேனல்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் பயனளவில் உள்ளது. முறையாக செயல்படுத்தப்படாததால் தனியார் கேபிள் டிவி யில் அதிகபட்ச மாத கட்டணம் அளித்து தாங்கள் விரும்பாத சேனல்களை கூட பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். தாங்கள் விரும்பிய சேனல்களை பார்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்’’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஏ.என்.எஸ்.பிரசாத்!

தமிழக அரசு செவி சாய்க்குமா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal