‘ஊழலின் பிறப்பிடமாக விளங்கும் செந்தில் பாலாஜி, கரூர் உயிர்பலி விவகாரத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்’ என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செந்தில் பாலாஜியின் கட்டுக்கடங்காத மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல்,பண பல தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது.

ஊழலின் பிறப்பிடமாக அரசியலில் “பொய் வாழ்வு” வாழும் செந்தில் பாலாஜி “பொதுவாழ்வு” என்ற புனிதமான சொல்லை, தனக்கு பயன்படுத்தி கொச்சைப்படுத்தக் கூடாது”

செந்தில் பாலாஜியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு சட்டவிரோதமானது. அவரின் கட்டுக்கடங்காத, மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல், பண பல, தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என்பதை திராவிட மாடல் அரசின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்திய இந்த படு பயங்கரமான 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், 6 கோடி தமிழக மக்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில், சிபிஐ விசாரணையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக முதல்வர் அறிவிக்க வேண்டும்.

இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் ஊழல் ஆட்சியால் சிதைத்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்த, தமிழக அரசியலில் பேரறிஞர் அண்ணாவால் ஊழலை எதிர்க்க உருவாக்கப்பட்ட திமுக இயக்கம்,பின்னர் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கி, பொன்விழா கண்ட இந்தியாவின் மூத்த கட்சிகளில் ஒன்றான திமுக, மக்கள் நல அரசியலை முன்னிறுத்தி துணிவுடன், நம்பிக்கையுடன் தேர்தலை சந்திக்க திராணியில்லாமல், ஊழலுக்கு இலக்கணமான, மொத்த ஊழல் வடிவமான ஐந்து (005)கட்சி அமாவாசைகளின் சதி அரசியலுக்கு துணை போவது ஜனநாயகத்தை கொன்று விடுவதற்கு சமமானது.

திமுகவின் மூத்த அரசியல்வாதி பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களே! இதுதான் அண்ணா உங்களுக்கு கற்றுத் தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடா? இதுதான் திராவிட மாடல் அரசியலா?என்பதை தமிழக மக்களுக்கும் உண்மையான திமுகவினருக்கும் விளக்க வேண்டும்.

கரூரில் 41 பேர் உயிர் பலியான கோர சம்பவத்தின் வலி, வேதனை குறித்து அறியாமல், சட்டத்தை வளைக்கும் வகையில், எதுவுமே நடக்காதது போல், நடந்து சம்பவத்தை திசை திருப்பும் முயலும் ஐந்து கட்சி அரசியல்வாதியின் சுயநல, பண பல, கிரிமினல் அரசியலையும், தமிழக மக்களுக்கு திமுக செய்து வரும் துரோகத்தையும் பாஜக வெளிச்சத்துக்கு கொண்டுவரும்.

இந்தியாவையே உலுக்கியுள்ள இந்த கொடிய சம்பவத்தின் உண்மைகளை குழி தோண்டி புதைத்து, தமிழக மக்களின் உயிரோடு விளையாடிய மக்கள் விரோத அமாவாசை அரசியலுக்கும், திமுகவின் வழக்கமான, பிணந்தின்னி மரண வியாபார அரசியலுக்கும் தமிழக மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

கரூர் உயிரிழப்பின் பின்னணியில் எவ்வளவு பெரிய அரசியல் சக்தி இருந்தாலும், பாஜக சமரசம் இல்லாமல் உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை சட்டப்படி தண்டிக்கும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வழிகாட்டுதலில் தமிழக மந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிகள் குழு விரைவில் தன்னுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலில் தமிழக அரசின் தமிழக காவல்துறையின் நிர்வாக சீர்கேடுகள் குறித்த நீதி விசாரணை நடக்கும். மேலும் 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசியல் சதி உள்ளது உள்ளூர் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்த தமிழக வெற்றி கழகத்தின் குற்றச்சாட்டின் பின்னணி குறித்து உண்மைகளை வெளிக்கொணரவும், தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் சிபிஐ விசாரணை அமையும் வரை பாஜக போராடும்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய், குறித்த நேரத்திற்கு வராததால் தான் உயிர் இழப்பு ஏற்பட்டது. அன்று மாலை 4 மணிக்கு விஜய் வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது மற்றும் விஜய் மீது செருப்பு வீசியது ஏன்?என்பதற்கு புது விளக்கமும், போலீஸ் எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்காததால் தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் இன்று மாட்சிமை தங்கிய நீதிபதி போல் ஊழல் குற்றவாளி செந்தில் பாலாஜி புதுவிதமான தீர்ப்பு எழுதி உள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஜெனரேட்டர் ஆப் செய்யப்பட்டது ஏன்? கூட்ட நெரிசல் அதிகமாகும் போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடைத்து தமிழக வெற்றி கழகத்தினர் விழுந்ததால் தான் விபத்து ஏற்பட்டது. காலி தண்ணீர் பாட்டில் ஒன்றாவது நீங்கள் பார்த்தீர்களா? தண்ணீர் பாட்டில் கொடுக்காதது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, திமுக அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தன் கடமையை சரியாக செய்தது, ஆனால் தமிழக வெற்றி கழகம் தனது கடமையை சரிவர செய்யாததால் தான் விபத்து ஏற்பட்டது இன்று புதுப்புது வடிவங்களில் பல்வேறு அர்த்தங்களில், உண்மையை மறைக்கும் வகையில் அவராகவே உருவாக்கிய கேள்வி பதில் வடிவமான உருவாக்கிய பல்வேறு கற்பனைக் கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி அளித்த கிரிமினல் விளக்கத்தையும் எதிர்காலத்தில் சிபிஐ விசாரணையில் சொல்ல வேண்டும்.

தற்பொழுது நடந்த சம்பவத்தை திசை திருப்பும் விதமாக, அவசர அவசரமாக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷனின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் அவர்களின் மனசாட்சி போல, காவல்துறைக்கும் விசாரணை அமைப்புக்கும் வழிகாட்டுதல் வழங்குவது போல, உண்மைகளை மறைத்து, தவறாக சித்தரித்து பொய் பேசுவது ஆபத்தானது. செந்தில் பாலாஜி தன்னுடைய உச்சபட்ச நாடக அமாவாசை அரசியலை, திமுக அரசின் பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், கரூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது மூலம் திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது. தமிழக மக்கள் உண்மைகளை புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும், காவல்துறையும் ஒரு பக்கம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி பயங்கரமான பதட்டத்துடன், பொய்யான கருத்துக்களை நடந்த சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து திசை திருப்பும் வகையில், தமிழக வெற்றி கழகம் கூறியது எல்லாம் வதந்தி என்று அவசர அவசரமாக கூற வேண்டிய அவசியம் என்ன? கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில் விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளை தடுக்க முயல்வது ஏன்?

தமிழக அரசிற்கும் விசாரணை அமைப்புகளுக்கும் உதவியாக வந்த பாஜக குழுவை அவமானப்படுத்தும் வகையில் கொச்சைப்படுத்தும் வகையில், வேலை வாங்கித் தருவதாக ஏழை மக்களை ஏமாற்றி ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்று திரும்பிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடமை உணர்வுடன் மக்களுக்கு பணியாற்ற வந்த கண்ணியமிக்க பாஜக எம்பிக்கள் குழுவை மணிப்பூருக்கு சென்றார்களா? என்று மணிப்பூர் சம்பவத்திற்கும் கரூர் சம்பவத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் மணிப்பூரின் அரசியல் வரலாறு தேசிய பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல், இகழ்ந்து பேசியது மன்னிக்க முடியாது. கரூரில் நீதியை நாட்ட முயலும் அரசியல் சதியை ஆராய முயலும் பாஜக எம்பிக்கள் குழுவை தடுக்கும் விதத்தில், அவமதித்த செந்தில் பாலாஜி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து 66 பேர் பலியான போது, தமிழக முதல்வர் கருணையுடன் பாதிக்கப்பட்ட “கருணாபுரம்” சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்த பொழுது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, உடனடியாக முதல்வர் நேரில் செல்ல வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்தும் அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி தேர்தல் பேரங்களுக்கு மட்டும், அரசியல் சுயலாபத்துக்காக டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் இரவோடு இரவாக, இருளோடு இருளாக கரூர், வேலுசாமிபுரத்திற்கு ஓடோடி வந்ததன் பின்னணி குறித்து செந்தில் பாலாஜி ஏன் பேசவில்லை? தன்னை உயிரினும் மேலாக காக்கும் முதல்வரை, காட்டிக் கொடுக்க மறுப்பது நியாயம் தானே?

29 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறேன். 1996ம் ஆண்டு பொது வாழ்வு தொடங்கியது என்று வியாக்கியானம் பேசும் செந்தில் பாலாஜி, ஊழலே வாழ்க்கை என்ன முடிவெடுத்து அரசியல் செய்தும், பல கட்சிகள் மாறி “மக்கள் பணத்தை விஞ்ஞான ரீதியில் ஏஐ தொழில்நுட்பத்தையும் மிஞ்சும் வகையில் ஊழல் செய்து கொள்ளையடிப்பதில் திறமை காட்டியும், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிப்பது என் கொள்கை” என்றும் ” பொய் வாழ்வு வாழும் ஊழல் அரசியல்வாதி” இனி எதிர்காலத்தில் தயவுசெய்து “பொது வாழ்வு” என்ற புனிதமான அரசியல் தமிழ்ச்சொல்லை பயன்படுத்த, தமிழ் சமுதாயம் அனுமதிக்க கூடாது

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக டாஸ்மார்க் கடைகளில் மது பிரியர்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது என்கிற பாஜகவின் தொடர் குற்றச்சாட்டு மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் கூறிய பத்து ரூபாய் பாலாஜி, நடிகர் விஜய் அவர்கள் பாடிய பத்து ரூபாய் பாட்டு ஆகியவை உண்மை என்பதை தெளிவாக விளக்கும் வகையில், தமிழக மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் 2021-க்குப் பிறகு, திமுக ஆட்சியில் ரூ. 10க்கு கீழ் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களின் நடவடிக்கை – 18,253. 10-க்கும் மேல் வசூலிப்பதாக வந்த புகார்களின் நடவடிக்கை – 2,356. இந்த புகார்களின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.8 கோடியே 51 லட்சம். என்பதை ஆதாரப்பூர்வமாக வழங்கிய, ஆணித்தரமாக கூறிய அண்ணன் செந்தில் பாலாஜிக்கு நன்றி.

தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடக்கிறது என்பதை முன்னாள் சாராயம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போதிய விளக்கத்துடன் தமிழக மக்களுக்கு, மது பிரியர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்? மிக முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்கு அறிந்த ஊழலின் பிறப்பிடமான, இந்த அமாவாசை அரசியல்வாதியின் பேச்சை நம்பாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு, தாயுள்ளத்துடன், கரூர் வேலுச்சாமிபுரத்தில், தங்களின் குடும்பத்தில் ஒருவர் அநியாயமாக உயிர் இழந்ததால், தினம் தினம் கண்ணீர் சிந்தும் குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு, இதே பூர்வமான அஞ்சலி செலுத்திய ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் பெருந்தன்மையுடன், அரசியல் நாகரீகத்துடன் முன்மாதிரி முதல்வராக சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal