த.வெ.க.வின் முதல் மாநாட்டில் பா.ஜ.க.வையும், தி.மு.க.வையும் தாக்கிப் பேசிய விஜய், அ.தி.மு.க. மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அடுத்த மதுரை மாநாட்டில் அ.தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார். காரணம், அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது.
த.வெ.க. மாநாடு முடிந்த கையோடு மக்களை சந்தித்தார் விஜய். முதலில் திருச்சி அரியலூர் என தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி பிரச்சாரத்தின் போது விஜய்யின் கூட்டத்திற்கு ஆம்புலன் புகுந்தது முதல், ஸ்பீக்கர் வயர் கட்டானது வரை விஜய்யை கடுமையாக டென்ஷன் ஆக்கியது.
அடுத்த அரியலூர் கூட்டத்தில் ஸ்பீக்கரை சரி செய்து பேசினார் விஜய்! முதல் மக்கள் சந்திப்பில் விஜய்க்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் தி.மு.க. அதிர்ந்து போனது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கருதிய ஆளும் கட்சி, விஜய்யின் பிரச்சாரத்திற்கு, சாத்தியமில்லாத விதிகளை உருவாக்கியது. இது விஜய்யை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
சாத்தியமில்லாத விதிகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு நேற்று நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, ‘தில்’லாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினை எதிர்த்தார் விஜய். ‘பெயருக்காக கொள்கையை வைத்துக்கொண்டு, குடும்பதோடு சேர்ந்து கொள்ளை அடிக்கிறீங்க!’ என பகிரங்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தார்.
அடுத்ததாக, கலைஞர் பிறந்த ஊரான திருவாரூருக்கு சென்ற விஜய், ‘விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் தி.மு.க. அரசு’ என்று விளாசினார். விஜய்யின் பேச்சு தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஸ்டாலினுக்கு தூக்கத்தை தொலைத்துவிட்டதாம்.
தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் வியக்கும் வகையில் விஜய்க்கு கூட்டம் கூடுதை யாராலும் தாங்க்கொள்ள முடியவில்லை. இதனால், ‘கூட்டம் கூடும் ஓட்டாக மாறாது’ என விமர்சித்தனர். இந்த விமர்சனம் விஜய்யின் காதுகளை எட்டிய நிலையில்தான், இந்த சந்தேகத்தை திருவாரூரில் தொண்டர்களிடையே விஜய் கேட்டுவிட்டார். அப்போது தொண்டர்கள், ‘டி.வி.கே…. டி.வி.கே…’ என்று முழங்கி வாக்கு உங்களுக்குத்தான் என்றனர்.
விசயத்திற்கு வருவோம்… விஜய் ஒன்றும் ஒன்னும் அறியாதவரல்ல! 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் சரி, த.வெ.க. தலைமையில் கூட்டணி வைத்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது விஜய்க்கு நன்றாகத் தெரியும். தேர்தல் களத்தில் பழம் தின்று கொட்டைப் போட்ட தி.மு.க.வின் சித்து விளையாட்டுக்களை விஜய் தாக்குப் பிடிப்பாரா என்பதே மில்லியன் டாலர் கேள்வி. த.வெ.க.வின் வேட்பாளர்களை ‘விலை’ கொடுத்து வாங்கும் முயற்சியும் நடக்கும். சிலர் விலை போனாலும் ஆச்சயர்ப்படுவதற்கில்லை.
இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் நேற்று திருவாரூர் பிரச்சாரம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் விஜய் தொலை பேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி உடன் அரசியல், கூட்டணி தொடர்பான உரையாடலுக்காக அவரை விஜய் தொடர்புகொண்டிருக்கலாம் என்கிறார்கள். இவர்கள் தமிழகத்தில் மாறிவரும் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்திருக்கலாம். திமுகவிற்கு எதிராக எடப்பாடி – விஜய் கைகோர்க்கும் விதமாக இந்த போன் கால் அமைந்ததா என்ற கேள்வி எழுந்தது.
தமிழ்நாட்டில் இன்னமும் திமுகவிற்கு சாதகமான சூழல்தான் உள்ளது. ஆளும் திமுகதான் வெற்றிக்கு அருகில் உள்ளது. அதை தடுக்கும் விதமாக அதிமுக உடனான கூட்டணி குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.
இதற்கிடையே நேற்றை பிரச்சாரத்தில் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை விஜய் வைக்கவில்லை. காரணம், மத்திய அரசை ரொம்பவும் பகைத்துக்கொள்ளவேண்டாம் என அவருக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்!
எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!