மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும் போது எடப்பாடி பழனிசாமி, தன் முகத்தை கைக்குட்டையால் மூடியபடியே காரில் சென்ற வீடியோவை பதிவு செய்த பத்திரிகையாளர் நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அதிமுக!
இது தொடர்பாக பத்திரிகையாளர் பரக்கத் அலி தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில், ‘‘கூட்டணிக்குள் இருந்து கொண்டே ‘தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன்’ என அண்ணாமலை சொன்ன போது….
‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்’ என அண்ணாமலை கர்ஜித்த போது…
‘1956- ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அண்ணாவை, முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்குப் பால் அபிஷேகத்துக்குப் பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்தார். அதற்குப் பயந்து அண்ணா ஓடிவந்து மன்னிப்பு கேட்டார்’ என்று அண்ணாமலை பொய்ச் செய்தியை விதைத்த போது..
‘ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்’ என ஆடிட்டர் குருமூர்த்தி கொச்சையாக வசைபாடிய போது…
மிகக் கேவலமாகப் பிச்சை எடுப்பவர்கள் என விமர்சித்து துக்ளக் வார இதழில் குருமூர்த்தி கார்ட்டூன் போட்ட போது….
யாருக்கெல்லாம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள்? என்ற விவரம் எம்.ஜி.ஆர் மாளிகையில் இருந்தால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் பகிர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அம்மா என்று கட்சியினர் அழைக்கும் ஜெயலலிதாவை… கட்சியில் பெயர் தாங்கி நிற்கும் அண்ணாவை… விமர்சித்த போது வராத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்ட போது விம்மி துடிக்குது. ஜெயலலிதாவை, அண்ணாவைக் கேவலமாக விமர்சித்த போது அதிமுகவின் வழக்கறிஞர் அணி பிணியில் இருந்ததா?’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் – எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி!