தனது சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தையே ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறும் தங்கமணியால், திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வை எப்படி ஒருங்கிணைத்து வெற்றி பெற வைக்கப்போகிறார். இவரை பொறுப்பாளராக நியமித்திருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதிமுக-வை ஒருங்கிணைக்க தனக்கு 10 நாள் கெடு வைத்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை இபிஎஸ் பறித்திருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான பி.தங்கமணிக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் அணி திரட்டி வருவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்திவேலூர் எம்எல்ஏ-வான சேகர், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சரஸ்வதி, கலாவதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில், நாமக்கல் நகரச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.பி.பி.பாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
அண்மையில் அதிமுக-வில் இணைந்த சேந்தமங்கலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சி.சந்திரசேகரனும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டம் நடப்பது குறித்து முறையாக தகவல் தெரிவிக்காததே அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், “ஆனால், அதுமட்டுமே காரணம் கிடையாது.
நாமக்கல் மாவட்ட அதிமுக-வை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக பாஸ்கருக்கும், தங்கமணிக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நடக்கிறது. அதனால், ஆட்சியில் இருந்தபோதே பாஸ்கர் விவகாரத்தில் தங்கமணி தலைகாட்டமாட்டார். கட்சி அறிவிக்கும் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தான் நடக்கும் மாவட்டத் தலைநகரான நாமக்கல்லில் நடக்காது. இத்தனை நாளும் வெளியில் தெரியாமல் இருந்த இந்தப் புகைச்சல் இப்போது வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ-வான சந்திரசேகரன் 2021-ல் இரண்டாவது முறையாக வாய்ப்புக் கேட்டார். ஆனால், தங்கமணி அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. அதனால் கட்சியைவிட்டு விலகி சுயேச்சையாக போட்டியிட்ட சந்திரசேகரன், அதிமுக-வை தோற்கடித்தார். மீண்டும் இப்போது அதிமுக-வுக்கு திரும்பியுள்ள சந்திரசேகரனுக்கு தங்கமணி மீதான தனது பழைய கோபம் தீரவில்லை. அதனால் அவரும் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்” என்றனர்.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு இப்படி ஆளாளுக்கு குறுநில மன்னர்களைப் போல் அரசாட்சி நடத்திக் கொண்டிருந்தால் எடப்பாடியார் என்றைக்கு மக்களை காப்பது தமிழகத்தை மீட்பது?