தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியல் போட்ட விஜய்… சொன்னீர்களே…! செய்தீர்களா..? என கேள்வி கேட்டு ஆளும் தி.மு.க.வை திணறடித்துவிட்டார்!

திருச்சியில் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்த விஜய், அங்கிருந்து 4 கி.மீ. தூரம் உள்ள திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தொண்டர்கள் புடைச்சூழ அவரது பிரச்சார வாகனம் ஊர்ந்து வர 5 மணி நேரம் ஆனது.

த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்கள் போட்ட துண்டுகளில் ஒன்றை எடுத்து வழக்கம் போல் எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து விஜய் பேசுகையில், ‘‘நான் பேசுறது கேட்கிறதா, அந்த காலத்தில் போருக்கு போறதுக்கு முன்னாடி ஜெயிக்கிறதுக்கு குலதெய்வதம் கோயிலில் சுவாமி கும்பிட்டுத்தான் செல்வார்களாம்.அது போல் அடுத்த வருடம் தேர்தலில் வெற்றி பெற திருச்சியில் மக்களை கும்பிட வந்திருக்கிறோம். திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும் என்பார்கள்.

இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அண்ணா துரை தேர்தலில் போட்டியிட முடிவு செய்த இடம் திருச்சியில்தான். இது 1956 இல் நடந்தது. அது போல் எம்ஜிஆர் மாநில மாநாட்டை 1975 இல் திருச்சியில்தான் நடத்தினார். திருச்சியில் மலைக்கோட்டை, பெரியாருடைய இடம் உள்ளது. பெரியாரும் அண்ணாவும் நேசித்த இடம் திருச்சி! நம்ம மக்களாகிய உங்கள் எல்லாரையும் பார்த்துட்டு போக வந்திருக்கிறேன். ஒரு சில மண்ணை தொட்டால் நல்லது என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல் திருச்சியில் தொடங்கிய எல்லாமே வெற்றிதான்! கல்விக்கடன் ரத்து… நீட் தேர்வு ரத்து… என தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி, சொன்னீர்னகளே… செய்தீர்களா…’’ என தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார்.

திருச்சியில் உள்ள 9 தொகுதிகளின் பெயர்களை வாசித்தவர், கிட்னி முறைகேடு தொடர்பாக மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ-. கதிரவனையும் ஒரு பிடிபிடித்தார். தவிர, திருச்சியில் உள்ள முதன்மையானப் பிரச்னைகளைப் பற்றி பேசினார்.

மைக் கோளாறு காரணமாக விஜய் பேசியது நிறைய பேருக்கு கேட்கவில்லை. டிவி நேரலைகளிலும் அவரது பேச்சு கேட்காததால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் தனது பேச்சையும் சுருக்கமான முடித்துககொண்டார்.

அ.தி.மு.க.வின் கூட்டத்தில் உள்ளே போகும் ஆம்புலன்ஸ் போலவே விஜய்யின் கூட்டத்திற்குள்ளேயும் ஆம்புலன்ஸ் நுழைந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal